அரசு அதிகாரிகளுக்கு 'சம்மன்' : வழிகாட்டு நெறிமுறைகள் தயார்
அரசு அதிகாரிகளுக்கு 'சம்மன்' : வழிகாட்டு நெறிமுறைகள் தயார்
அரசு அதிகாரிகளுக்கு 'சம்மன்' : வழிகாட்டு நெறிமுறைகள் தயார்
ADDED : ஜன 03, 2024 09:56 PM

புதுடில்லி: வழக்குகளுக்கு நேரில் ஆஜராக, அரசு அதிகாரிகளுக்கு, 'சம்மன்' அனுப்பு வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்து உள்ளது.
வழக்கு ஒன்றின் விசாரணைக்கு உத்தர பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றம், சில அரசு அதிகாரிகளை ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தங்களுடைய உத்தரவுகளை செயல்படுத்தாததால், இரண்டு அதிகாரிகளை கைது செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆகஸ்டில் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்புவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதாக தெரிவித்திருந்தது.இதன்படி, உயர் நீதிமன்றங்களுக்கு உதவும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வழக்குகள் தொடர்பாக அரசு அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிடும்போது, மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். வழக்கு தொடர்பாக சாட்சியம் அல்லது நடைமுறை ஆவணங்களை பதிவு செய்ய, தேவைப்பட்டால் மட்டுமே அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும்.
பிரமாண பத்திரங்கள் வாயிலாக தேவையான தகவல்களை திரட்ட முடியுமானால், அதையே பயன்படுத்தலாம்; நேரில் ஆஜராக வலியுறுத்தக் கூடாது. அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்த கடுமையான விமர்சனங்கள், அவர்கள் அணியும் ஆடை தொடர்பான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.முடிந்தவரை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்க அரசு அதிகாரிகளுக்கு வாய்ப்பு தர வேண்டும். நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் இருந்தால், போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.