Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/2,200 கோடியில் 1,200 ஏக்கரில் அயோத்தி அருகில் துணை நகரம் : சர்வதேச விருந்தினர்களுக்காக திட்டம்

2,200 கோடியில் 1,200 ஏக்கரில் அயோத்தி அருகில் துணை நகரம் : சர்வதேச விருந்தினர்களுக்காக திட்டம்

2,200 கோடியில் 1,200 ஏக்கரில் அயோத்தி அருகில் துணை நகரம் : சர்வதேச விருந்தினர்களுக்காக திட்டம்

2,200 கோடியில் 1,200 ஏக்கரில் அயோத்தி அருகில் துணை நகரம் : சர்வதேச விருந்தினர்களுக்காக திட்டம்

UPDATED : ஜன 06, 2024 01:58 AMADDED : ஜன 06, 2024 01:34 AM


Google News
Latest Tamil News
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்படும் பிரமாண்ட ராமர் கோவிலால், அந்த நகரமே மறுசீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் மாறி வருகிறது. சர்வதேச தரத்தில் செய்யப்படும் மாற்றங்கள், புதிய இந்தியாவின் வெளிச்ச பூமியாக அயோத்தியை ஒளிர்விடச் செய்துள்ளது.

வட மாநிலங்களின் மிகப் பழமை வாய்ந்த, நுாற்றாண்டு சிறப்பு மிக்க அயோத்தியின் அடையாளம், ராமர் கோவிலின் வருகையால், நவீன உலகிற்கு ஏற்ப மாற்றம் அடைந்துள்ளது.

முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றாக கருதப்படும் அயோத்தி, புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு புனித யாத்திரை தலமாக உருவெடுத்துள்ளது.'புதிய இந்தியாவின் உருவகமாக ராமர் கோவில் இருக்க வேண்டும்' என்ற பிரதமர் மோடியின் கனவை, நனவாக்கும் பணியில் முழுவீச்சில் செயல்படுகிறார், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.

அவரின் முயற்சியால், ஏராளமான கட்டுமான பணியாளர்கள், ஓவியர்கள், ஸ்தபதிகள் என பலரும் ஒன்று சேர்ந்து காவியம் படைக்கும் கோவிலை உருவாக்கும் பணியில் இரவு, பகலாக உழைக்கின்றனர். ராமரை தரிசிக்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருவர் என்பதால், நகரம் முழுதும் மறுசீரமைக்கப்படுகிறது. இங்கு, 1,200 ஏக்கரில் 2,200 கோடி மதிப்பில் துணை நகரம் அமைப்பதற்கான பணிகளும் நடக்கின்றன.

''அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் பணிகளால், 21ம் நுாற்றாண்டின் உலகத் தரம் வாய்ந்த நகரங்களின் பட்டியலில் அயோத்தி இடம்பெறும்,'' என, முழு நகரத்திற்கான தொலைநோக்கு ஆவணத்தை உருவாக்கிய, கட்டட கலைஞரும், நகர்ப்புற திட்டமிடல் அதிகாரியுமான திக் ஷு குக்ரேஜா தெரிவித்துள்ளார். கோவில் திறப்பு விழாவை ஒட்டி, நகரம் முழுதும் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகள், தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமாக இருக்கும் வகையில் செய்யப்படுகிறது.

அயோத்தியில் உள்ள சாலைகள் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து இணைக்கும் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு, புதிய சாலைகள் போடப்பட்டுள்ளன. கோவிலுக்கு நேராக செல்லும், ராமர் பாதை எனப்படும் மிக நீளமான, 13 கி.மீ., நடைபாதை, அங்குள்ள கடைகள், வீடுகள் என அனைத்தும் புதுப்பொலிவுடன் மாறி வருகின்றன.ஒரே மாதிரியான வண்ணங்கள், டிசைன்கள், அலங்கார வளைவுகள், தோரணங்கள் என, அப்பகுதி முழுதும் அலங்கரிக்கப்பட்டு, ஆன்மிக பூமியை கண்முன்னே காட்சிப்படுத்துகின்றன.

புதிதாக கட்டப்படும் ராமர் கோவிலின் தோற்றம், ஸ்வஸ்திகா சின்னம், ராமரின் சங்கு, சூரியன், வில் - அம்பு ஆகிய படங்களுடன், 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற வாசகமும், அங்குள்ள கடைகளின் பலகைகள், வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன.வெவ்வேறு வண்ணங்களில், மாறுபட்ட உருவங்களில் ராமர், சீதை, ஹனுமன் ஆகியோரின் படங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு, பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.

கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கியதில் இருந்தே, இங்கு நிலங்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பகவான் ராமரின் அடையாளங்கள், அவரின் வாழ்க்கையை தொடர்புபடுத்தும் விஷயங்கள் என அனைத்துமே, அயோத்தி நகரில் பார்க்கும் இடமெல்லாம் நிறைந்துள்ளன.

1 லட்சம் திருப்பதி லட்டு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அலுவலர் தர்மா ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை காண வரும் பக்தர்களுக்கு, 25 கிராம் எடையிலான லட்டு பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு லட்சம் லட்டுகள் அங்கு அனுப்பி வைக்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.இதேபோல் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் மேற்கொள்ள ttdevasthanams.ap.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தளத்தின் வாயிலாக ஆர்ஜித சேவைகள், வாடகை அறைகள் பெறவும், நன்கொடை அளிக்கவும் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்ந்தவருக்கு அழைப்பு


பாபர் மசூதி வழக்கில், முஸ்லிம் தரப்பைச் சேர்ந்த மனுதாரர் இக்பால் அன்சாரி என்பவருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அயோத்தியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்கள் இக்பால் அன்சாரியிடம் நேற்று அழைப்பிதழ் வழங்கினர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''அயோத்தியில் கடவுள் ராமரின் சிலையை நிறுவி, பிரதிஷ்டை செய்ய இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அயோத்தி, ஹிந்து, முஸ்லிம், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள் என அனைவருக்குமான நல்லிணக்க பூமி. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாடு முழுதும் உள்ள முஸ்லிம்கள் மதிக்கின்றனர்,'' என்றார்.

-நமது சிறப்பு நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us