விடுமுறையில் மூத்த வக்கீல்கள் ஆஜராகாதீர்கள்: சுப்ரீம் கோர்ட்
விடுமுறையில் மூத்த வக்கீல்கள் ஆஜராகாதீர்கள்: சுப்ரீம் கோர்ட்
விடுமுறையில் மூத்த வக்கீல்கள் ஆஜராகாதீர்கள்: சுப்ரீம் கோர்ட்
ADDED : மே 29, 2025 12:35 AM

புதுடில்லி: 'விடுமுறை காலத்தில் நடக்கும் வழக்குகளின் விசாரணையில், மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட வேண்டாம்' என, முகுல் ரோஹத்கி, அபிஷேக் சிங்வி உள்ளிட்டோரை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் ஆண்டுதோறும், கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த நாட்களில், விடுமுறை கால சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டு, சில நீதிபதிகள் மட்டும் பணியில் இருப்பர். தற்போது, கோடை விடுமுறை விடப்படுவது தொடர்ந்தாலும், 'பகுதி நேர நீதிமன்ற வேலை நாட்கள்' என பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும், கோடைக்கால அமர்வில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான விடுமுறை காலம், மே 26 முதல் -ஜூலை 14 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திரா சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிரான வழக்கு ஒன்றின் விசாரணை நேற்று நடந்தது.
அப்போது, ஆஜரான வழக்கறிஞர்களில் ஒருவர், தங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆஜராக முடியாததால், வழக்கை ஒத்திவைக்கும்படி கோரினார்.
இதையடுத்து, 'உச்ச நீதிமன்றத்தின் பகுதி வேலை நாட்களின்போது, வழக்கு விசாரணைகளில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிடக் கூடாது. இதை கடைப்பிடிக்கும்படி, மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, அபிஷேக் மனு சிங்வி, நீரஜ் கிஷன் கவுல் உள்ளிட்டோரை கேட்டுக் கொள்கிறோம். விடுமுறை காலத்தில், ஜுனியர் வழக்கறிஞர்களுக்கு, வாதிடும் வாய்ப்பை மூத்த வழக்கறிஞர்கள் ஏற்படுத்தி தர வேண்டும்' என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவன தலைமையகத்தில் அமலாக்கத் துறை சோதனை தொடர்பான வழக்கு, மத்திய அரசால் விமான நிலைய பணிகளில் தடை செய்யப்பட்ட துருக்கி நிறுவனமான ஸெலெபியின் வழக்கு உள்ளிட்டவற்றில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதிடுவது குறிப்பிடத்தக்கது.