சி.பி.ஐ., கோரிக்கையை ஏற்றது 'இன்டர்போல்': முதல் 'சில்வர் நோட்டீஸ்' வெளியிட்டது
சி.பி.ஐ., கோரிக்கையை ஏற்றது 'இன்டர்போல்': முதல் 'சில்வர் நோட்டீஸ்' வெளியிட்டது
சி.பி.ஐ., கோரிக்கையை ஏற்றது 'இன்டர்போல்': முதல் 'சில்வர் நோட்டீஸ்' வெளியிட்டது
ADDED : மே 29, 2025 12:31 AM

புதுடில்லி: இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, முதல், 'சில்வர் நோட்டீஸ்' வெளியிட்டது, 'இன்டர்போல்' அமைப்பு. இரண்டு வழக்குகளில் தொடர்புடையோரின் சொத்துக்கள் குறித்து இந்த நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச போலீஸ் அமைப்பான, இன்டர்போல், நாடுகளின் கோரிக்கைகளை ஏற்று, குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவுகிறது.
இவ்வாறு தேடப்படும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, 'ரெட் நோட்டீஸ்' உட்பட, எட்டு வகையான நோட்டீஸ்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், குற்ற வழக்குகளில் தொடர்புடையோரின் சொத்துக்களை கண்டறிந்து, முடக்குவது, பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக, 'சில்வர் நோட்டீஸ்' முறையை, இன்டர்போல் இந்தாண்டு ஜனவரியில் அறிமுகம் செய்தது.
இத்தாலியின் கோரிக்கையை ஏற்று, முதல் சில்வர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, இரண்டு குற்ற வழக்குகளில், சில்வர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது பரிசோதனை முறையில் உள்ள இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நாடும், தலா, ஒன்பது சில்வர் நோட்டீஸ்களை வெளியிட முடியும்.
இந்த திட்டத்தில், இந்தியா உட்பட, 51 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இன்டர்போல் அமைப்பில், இந்தியாவின் சார்பில் சி.பி.ஐ., தொடர்பு அமைப்பாக இடம்பெற்றுள்ளது. மற்ற விசாரணை அமைப்புகள், சி.பி.ஐ., வாயிலாகவே, நோட்டீஸ்கள் பிறப்பிக்க கோரிக்கை வைக்க முடியும்.
சில்வர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது தொடர்பாக, சி.பி.ஐ., கூறியுள்ளதாவது:
டில்லியில் உள்ள பிரான்ஸ் துாதரகத்தில் பணியாற்றிய விசா மற்றும் உள்ளூர் சட்ட அதிகாரியான ஷோகென், பணம் பெற்று மோசடியாக விசா வழங்கியதாக புகார்கள் எழுந்தன.
ஒரு விசாவுக்கு, 45 லட்சம் ரூபாய் வரை வசூலித்து, சட்டவிரோதமாக அவர் விசாக்களை வழங்கியுள்ளார். இந்த வகையில் கிடைத்த பணத்தில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை வாங்கியுள்ளார்.
அதை பறிமுதல் செய்வதற்கு, இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, கடந்த, 23ம் தேதி முதல் சில்வர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.
இதற்கு முன்பாக, இவருடைய இருப்பிடத்தைக் கண்டறிந்து தெரிவிக்க, இன்டர்போல் வாயிலாக, நீல நிற நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அரசின் அனுமதி பெறாமல், 'கிரிப்டோகரன்சி' எனப்படும் மெய்நிகர் நாணய பரிவர்த்தனை வாயிலாக, 113 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அமித் மதன்லால் லோகன்பால் என்பவர் மீது, சில்வர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.