ஆப்பரேஷன் சிந்துாரில் அச்சமறியா சிறுவன் சேவையை பாராட்டி கவுரவித்த ராணுவம்
ஆப்பரேஷன் சிந்துாரில் அச்சமறியா சிறுவன் சேவையை பாராட்டி கவுரவித்த ராணுவம்
ஆப்பரேஷன் சிந்துாரில் அச்சமறியா சிறுவன் சேவையை பாராட்டி கவுரவித்த ராணுவம்
ADDED : மே 29, 2025 12:23 AM

பெரோஸ்பூர்: பாகிஸ்தான் உடனான போரின்போது, களத்தில் நின்ற நம் வீரர்களுக்கு, சிறிதும் அச்சமின்றி, அர்ப்பணிப்புடன் தண்ணீர், பால், லஸ்ஸி வழங்கிய பஞ்சாப் சிறுவனை பாராட்டிய நம் ராணுவம், நேரில் அழைத்து கவுரவித்தது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாக்., இடையே மோதல் வெடித்தது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள பஞ்சாபின் தாரா வாலி கிராமத்தில் இருந்தும் நம் வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.
கடும் வெப்பம், துாசி நிறைந்த வயல்வெளிகளில் நின்றபடி, நம் வீரர்கள் போரில் ஈடுபட்டனர். அப்போது, உள்ளூர் விவசாயி சோனா சிங் என்பவரின், 10 வயது மகனான ஷ்ரவன் சிங், நம் ராணுவ வீரர்களுக்கு உதவினான்.
சீருடை இல்லை, ஆயுதங்கள் இல்லை. துணிச்சலாக போர்க்களத்திற்கு ஓடி ஓடிச் சென்று ராணுவ வீரர்களுக்கு, தண்ணீர், பால், லஸ்ஸி, ஐஸ் போன்றவற்றை வழங்கினான்.
ஒட்டுமொத்த கிராமமே தள்ளி நின்று போரை வேடிக்கை பார்த்தபோது, சிறுவன் மட்டும் ஒரு ராணுவ வீரன் போல உடன் நின்று உதவினான். சிறுவனின் சேவையால் நெகிழ்ச்சியடைந்த நம் ராணுவம், அவனை கவுரவித்தது. நம் ராணுவத்தின், 7வது காலாட்படை பிரிவின் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சிங் மன்ரால், சிறுவன் ஷ்ரவன் சிங்கை நேரில் அழைத்துப் பாராட்டினார். அவனுக்கு நினைவுப்பரிசு, ஐஸ்கிரீம் உள்ளிட்ட பிடித்த உணவுகளுடன் சிறப்பு விருந்தும் அளித்தார்.
அப்போது, 'நான் பயப்படவில்லை. களைப்பாக இருந்த வீரர்களுக்கு உதவினேன். அவர்கள் என்னை மிகவும் நேசித்தனர். ராணுவ வீரராகி நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறேன்' என, சிறுவன் ஷ்ரவன் தெரிவித்தான்.