எஸ்.சி., பிரிவினர் நிதியில் முறைகேடு? அமைச்சர் மறுப்பு
எஸ்.சி., பிரிவினர் நிதியில் முறைகேடு? அமைச்சர் மறுப்பு
எஸ்.சி., பிரிவினர் நிதியில் முறைகேடு? அமைச்சர் மறுப்பு
ADDED : பிப் 24, 2024 04:53 AM
பெங்களூரு : மாநில அரசின் வாக்குறுதித் திட்டங்களுக்கு, எஸ்.சி., - எஸ்.டி. பிரிவினர் திட்டங்களின் நிதியை பயன்படுத்துவது தொடர்பாக, சட்டமேலவையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் இடையே காரசார விவாதம் நடந்தது.
சட்டமேலவை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் சலவாதி நாராயணசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, சமூக நலத்துறை அமைச்சர் மகாதேவப்பா கூறியதாவது:
வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்த, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் நிதியை பயன்படுத்தவில்லை. எதிர்க்கட்சியினர் தேவையின்றி மக்களை தவறான பாதைக்கு இழுக்க முயற்சிக்கின்றனர். தலித்துகளின் பணம், தலித்துகளுக்கே பயன்படுத்துகிறோம். இதில் ஒரு பைசாவும், தவறாக பயன்படுத்தவில்லை.
உண்மையில் முந்தைய அரசே, எஸ்.சி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தியது. இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. முந்தைய அரசு விதிகளை மீறி, நிதியை பயன்படுத்தியது. உங்களின் பா.ஜ., அரசு செக்ஷன் 7 டியில் திருத்தம் செய்தது. நாங்களும் அதைத்தான் செய்தோம்.
கிரஹ லட்சுமி திட்டத்துக்கு, 3,156.31 கோடி ரூபாய், அன்னபாக்யாவுக்கு 853.32 கோடி, கிரஹ ஜோதிக்கு, 1,465.34 கோடி, சக்தி திட்டத்துக்கு 686.38 கோடி, யுவநிதி திட்டத்துக்கு 1.67 கோடி செலவிடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.