பதஞ்சலியின் 14 பொருட்கள் தயாரிப்பு பணி நிறுத்தம்
பதஞ்சலியின் 14 பொருட்கள் தயாரிப்பு பணி நிறுத்தம்
பதஞ்சலியின் 14 பொருட்கள் தயாரிப்பு பணி நிறுத்தம்
ADDED : ஜூலை 10, 2024 08:00 AM

புதுடில்லி, போலி விளம்பர விவகாரத்தில், தங்கள் நிறுவனத்தின், 14 பொருட்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக பதஞ்சலி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பொய்யான தகவல்களுடன் விளம்பரம் செய்ததை எதிர்த்து, ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனத்தின் தலைமையகம் செயல்படும் உத்தரகண்ட் மாநில அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது.
இதற்கு பதில் அளித்த உத்தரகண்ட் அரசு, பதஞ்சலி நிறுவனத்திற்கு, 14 பொருட்களை தயாரிப்பதற்கான லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதஞ்சலி சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: உத்தரகண்ட் அரசின் உத்தரவைத் தொடர்ந்து, 14 பொருட்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.
நாடு முழுதும் உள்ள, 5,606 விற்பனை நிலையங்களில் இருந்து அந்தப் பொருட்களை விலக்கி கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இந்த, 14 பொருட்கள் தொடர்பான விளம்பரங்களும் நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இருந்து விளம்பரங்கள் நீக்கப்பட்டது தொடர்பாக பதிலளிக்கும்படி, அமர்வு உத்தரவிட்டது. வழக்கின் விசாரணை, ஜூலை 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
14 பொருட்கள்
உத்தரகண்ட் அரசு தடை விதித்துள்ள பதஞ்சலி நிறுவனத்தின் 14 பொருட்களின் விபரம்: ஸ்வசாரி கோல்டு, ஸ்வசாரி வாட்டி, பிரோன்சோம், ஸ்வசாரி பிரவாஹி, ஸ்வசாரி அவாலே, முக்தா வாட்டி எக்ஸ்ட்ரா பவர், லிபிடாம், பிபிகிரித், மதுகிரித், மதுனாஷினி வாட்டி எக்ஸ்ட்ரா பவர், லிவாம்ரித் அட்வான்ஸ், லிவோகிரித், ஐகிரித் கோல்டு, பதஞ்சலி திருஷ்டி ஐ டிராப் ஆகியவை.