சாமுண்டி மலையில் 'ரோப் வே' அமைச்சர் எச்.கே.பாட்டீல் உறுதி
சாமுண்டி மலையில் 'ரோப் வே' அமைச்சர் எச்.கே.பாட்டீல் உறுதி
சாமுண்டி மலையில் 'ரோப் வே' அமைச்சர் எச்.கே.பாட்டீல் உறுதி
ADDED : ஜன 27, 2024 11:18 PM
பெங்களூரு: ''சாமுண்டி மலையில், ரோப் - வே அமைப்பது குறித்து அரசு ஆலோசிக்கிறது,'' என, சுற்றுலாத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் கூறியதாவது:
சாமுண்டி மலையில், ரோப் கட்டும் திட்டத்தை செயல்படுத்த ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகள் வெளியாகின. எனவே சாதகம், பாதகங்கள் குறித்து வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வோம். முதல்வர் சித்தராமையா, மாவட்ட பொறுப்பு அமைச்சர் மஹாதேவப்பாவுடன் ஆலோசிக்கப்படும்.
ரூ.40 கோடி
சாமுண்டி கோவில் வளர்ச்சிக்காக, வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'பிரசாத்' திட்டத்தின் கீழ், மத்திய அரசு வழங்கிய 40 கோடி ரூபாய் நிதியுதவியில், சாமுண்டி மலையில் வளர்ச்சி பணிகள் நடக்கும்.
'யுனெஸ்கோ' உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட, சோமநாதபுரம் சென்னகேசவ கோவிலில் அடிப்படை வசதிகள் செய்யப்படும். ஒரே தடவையில் அனைத்து வசதிகளையும் செய்ய முடியாது; படிப்படியாக செய்யப்படும்.இந்த கோவிலுக்கு செல்ல, பஸ் வசதி இல்லை என்பது குறித்து, எனக்கு தகவல் தெரியாது. பஸ் வசதி செய்யும்படி, கே.எஸ்.ஆர்.டி.சி., அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும்.
ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜ.,வுக்கு சென்றதால், காங்கிரசுக்கு எந்த நஷ்டமும் இல்லை. காங்கிரஸ் சமுத்திரம் போன்றதாகும். கொள்கை, சித்தாந்தம், அரசின் வாக்குறுதி திட்டங்களை ஆதரிப்போர், கட்சியில் உள்ளனர். ஏழைகளை வாழ்விக்கும் திட்டங்களை எதிர்ப்போர், கட்சியை விட்டு செல்கின்றனர். சித்தாந்தத்தை ஏற்காதவர்கள், இருந்தால் என்ன; போனால் என்ன.
இந்திரா காலம்
எந்த தலைவரையும் காவல் காக்க முடியாது. சி.ஐ.டி.,யை நியமிக்க முடியாது. இந்திரா காலத்தில் என்ன நடந்தது. முந்தைய சட்டசபை தேர்தலில், என்ன நடந்தது என, அனைவருக்கும் தெரியாது. காங்கிரஸ், ம.ஜ.த., கூட்டணி அரசு இருந்த போது, 17 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வுக்கு சென்றனர். ஆனால் என்ன நடந்தது. 135 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறவில்லையா.
எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி, காங்கிரசை விட்டு செல்வதில்லை என, கூறியுள்ளார். அதன்படி நடந்து கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. வாக்குறுதி திட்டங்களால், எங்களின் சக்தி அதிகரித்துள்ளது. இதனால் விரக்தி அடைந்து பா.ஜ.,வினர், ஆப்பரேஷன் தாமரை நடத்த முற்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கூறினார்.