வெயிலில் தவித்த வீரர்களுக்கு உதவிய பஞ்சாப் சிறுவன்: பரிசு கொடுத்து கவுரவித்த ராணுவம்
வெயிலில் தவித்த வீரர்களுக்கு உதவிய பஞ்சாப் சிறுவன்: பரிசு கொடுத்து கவுரவித்த ராணுவம்
வெயிலில் தவித்த வீரர்களுக்கு உதவிய பஞ்சாப் சிறுவன்: பரிசு கொடுத்து கவுரவித்த ராணுவம்
ADDED : மே 28, 2025 10:31 PM

சண்டிகர்: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நாட்டை காத்த வீரர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக தண்ணீர், பால், லஸ்சி கொடுத்து உதவிய சிறுவனை, ராணுவ உயர் அதிகாரி நினைவுப்பரிசு கொடுத்து பாராட்டினார்.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரையில், நமது ராணுவ வீரர்கள் இரவு பகல் பாராமல் பாதுகாத்து வந்தனர். அவர்களுக்கு, அப்பகுதி மக்கள் ஒத்துழைப்பு வழங்கி ஆதரவு அளித்தனர்.
பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூர் மாவட்டத்தின் தாரா வாலி என்ற கிராமத்திலும் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் ராணுவ வீரர்கள் நாட்டை பாதுகாத்து வந்தனர்.
அதனை பார்த்த அக்கிராமத்தை சேர்ந்த ஷ்ரவன் சிங் என்ற 10 வயது சிறுவனுக்கு, அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அந்தச் சிறுவனுக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது.
இதனால், பயப்படாமல் அவர்கள் அருகில் சென்ற அந்த சிறுவன், அவர்களுக்கு பால் , லஸ்சி, தண்ணீர் மற்றும் ஐஸ் கிரீம் உள்ளிட்டவற்றை அவர்களுக்கு வழங்கினார். அதனை வீரர்களும் சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டனர். இதனை ஒரு நாள் மட்டும் செய்யாமல் தொடர்ந்து செய்து வந்தான்.
இதனையறிந்த ராணுவத்தின் காலாட்படையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ரஞ்சித் சிங் மன்ரல் சிறுவனை அலுவலகத்திற்கு வரவழைத்து, நினைவுப்பரிசு வழங்கியதுடன், விருந்து அளித்து கவுரவித்தார். சிறுவனுக்கு விருப்பமான ஐஸ்கிரீமையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இதனையறிந்த சிறுவனின் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.