தவறாக புரிந்து கொண்ட கர்நாடக அரசியல்வாதிகள்: எச்.ஏ.எல்., விவகாரத்தில் சந்திரபாபு சொல்வது இதுதான்
தவறாக புரிந்து கொண்ட கர்நாடக அரசியல்வாதிகள்: எச்.ஏ.எல்., விவகாரத்தில் சந்திரபாபு சொல்வது இதுதான்
தவறாக புரிந்து கொண்ட கர்நாடக அரசியல்வாதிகள்: எச்.ஏ.எல்., விவகாரத்தில் சந்திரபாபு சொல்வது இதுதான்
ADDED : மே 28, 2025 10:26 PM

விஜயவாடா: கர்நாடகாவில் இருந்து எச்ஏஎல் நிறுவனத்தை தங்கள் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யக்கோரியதாக வெளியான தகவலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மறுத்து உள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் டில்லி சென்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரை சந்தித்து பேசினார். அப்போது, ராயலசீமா பகுதியில், பாதுகாப்பு உற்பத்தி மையத்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது, ஆனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள லேபக்ஷி என்ற இடத்தில் போர் விமான கட்டமைத்தல் மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த தொழில் துவங்க ஏற்ற இடமாக இருக்கும் எனவும் கூறியிருந்தார்.
ஆனால், கர்நாடகாவில் உள்ள பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல் நிறுவனத்தை ஆந்திராவிற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்ததாக தகவல் பரவின. கர்நாடக அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்க துவங்கினர். மாநிலத்தைச் சார்ந்த எந்த நிறுவனத்தையும் வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்டோர் கூறத்துவங்கினர்.இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியதாவது: கர்நாடகாவில் உள்ள எச்ஏஎல் நிறுவனத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என நான் கோரவில்லை. புதிய தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என தான் கோரினேன்.
இந்த நிறுவனம் மிகப்பெரியது. அப்படிப்பட்ட நிறுவனங்களை இடமாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது. ஒரு பிராந்தியத்தில் இருந்து மற்றொரு பிராந்தியத்திற்கு எந்த திட்டத்தையும் மாற்ற வேண்டும் என நான் கூறியது கிடையாது. அது எனது வரலாற்றில் கிடையாது.
வளர்ச்சி திட்டங்களை நாங்கள் எதிர்த்தது கிடையாது. மற்ற மாநிலங்களின் வளர்ச்சிக்கு எதிராகவும் கிடையாது.லேபக்ஷி பகுதியின் ஆற்றலை தான் நான் எடுத்துக்கூறினேன். ஆனால், கர்நாடக அரசியல்வாதிகள் அதனை தவறாக புரிந்து கொண்டுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: எச்ஏஎல் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய இரு மாநில எல்லையில் இருந்து 70 கி.மீ., தூரத்தில் 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒதுக்க தயாராக உள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.