ADDED : ஜன 07, 2024 02:36 AM
பெல்லந்துார் : மருத்துவ பரிசோதனைக்குச் சென்ற, கர்ப்பிணியின் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான, தங்க நகைகள் மாயமாகி உள்ளன. தனியார் மருத்துவமனை மீது, கணவர் போலீசில் புகார் செய்துஉள்ளார்.
பெங்களூரு பெல்லந்துாரில் வசிப்பவர் கிஷோர். ஐ.டி., நிறுவன ஊழியர். இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. மனைவி ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
சர்ஜாபூர் சாலையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் மாதந்தோறும் மருத்துவ பரிசோதனைக்குச் சென்று வருகிறார். கடந்த மாதம் 27ம் தேதியும், மருத்துவ பரிசோதனைக்கு சென்றிருந்தார்.
வீடு திரும்பியதும் அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின், கம்மல்கள் என, 92 கிராம் எடையுள்ள நகைகள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கணவரிடம் தெரிவித்தார்.
அவர் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தபோது, யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து மனைவியை நகைகளை திருடியதாக, மருத்துவமனை நிர்வாகம் மீது பெல்லந்துார் போலீசில், கிஷோர் புகார் அளித்தார். விசாரணை நடக்கிறது.