தலிபான் ஆட்சிக்கு முயற்சி பிரஹலாத் ஜோஷி காட்டம்
தலிபான் ஆட்சிக்கு முயற்சி பிரஹலாத் ஜோஷி காட்டம்
தலிபான் ஆட்சிக்கு முயற்சி பிரஹலாத் ஜோஷி காட்டம்
ADDED : ஜன 08, 2024 06:59 AM

ஹாவேரி: ''ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடத்துவது போன்று, கர்நாடகத்தையும் ஆட்சி செய்ய முதல்வர் சித்தராமையா முயற்சித்து வருகிறார். இதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்,'' என மத்திய பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
ஹாவேரி மாவட்டம், ஷிகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நாங்கள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நினைக்கிறோம். ஆனால் மாநில காங்கிரஸ் அரசு, மற்றவர்களை திருப்திபடுத்தும் அரசியல் மூலம் குறுகிய இந்தியாவை உருவாக்க முயற்சிக்கிறது.
டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்பாவிகள் என்று கூறி, அந்த வழக்குகளின் சாட்சிகளை பலவீனப்படுத்த காங்கிரஸ் அரசு முன் வந்துள்ளது.
இதை பார்த்தால், சித்தராமையா தலிபான் போன்று ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார். ஜனநாயகம் என்பது இந்தியர்களின் ரத்தத்திலும் பாரம்பரியத்திலும் உள்ளது. இப்படி செய்தால், மக்கள் உங்களை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு வைப்பர்.
ஹூப்பள்ளியை சேர்ந்த ஹிந்து ஆர்வலர் ஸ்ரீகாந்த் பூஜாரி கைது செய்யப்பட்டதில், எனக்கு பங்கு இருப்பதாக, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.
பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது, ஹூப்பள்ளி கலவர வழக்கில் அப்பாவி மக்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற நடவடிக்கை எடுத்து உள்ளது. அப்போது ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராகவும், அமைச்சராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார்.
அப்போது வாபஸ் உத்தரவை திரும்ப பெறும் அதிகாரம் இருந்தது. ஏன் அப்போது கையெழுத்திடவில்லை. காங்கிரசுக்கு சென்ற விரக்தியில், இப்படி சிறுபிள்ளை தனமாக அறிக்கை கொடுக்கிறார். இதுபோன்ற கருத்துகளுக்கு பதிலளிக்க மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.