பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பிள்ளைகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பிள்ளைகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பிள்ளைகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
ADDED : ஜன 08, 2024 07:01 AM

பெங்களூரு: ''பெற்றோரை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் பிள்ளைகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்,'' என பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா எச்சரித்துள்ளார்.
பெங்களூரு சர்ஜாபூர் சாலை வி.கல்லஹள்ளி கிராமத்தில் உள்ள கோவில் அருகில், நேற்று முன்தினம் மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மூதாட்டியிடம் விசாரித்த போது, அவர் பெயர் ஓபவ்வா, 80, என்பதும், அவரது மகளும், மருமகனும் தன்னை துன்புறுத்தி, தாக்கி, இரவு இங்கு வந்து விட்டு, விட்டு சென்றதாக குறிப்பிட்டார்.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ஆசிரமத்தில் மூதாட்டியை சேர்த்தனர். தகவல் அறிந்த சர்ஜாபூர் போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். மகளையும், மருமகனையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், போலீஸ் கமிஷனர் தயானந்தா அளித்த பேட்டி:
நகரில் பிள்ளைகள் சிலர், பெற்றோரை கவனித்து கொள்ள முடியாமல், முதியோர் இல்லத்தில் சேர்த்து, அதற்கான தொகையை வழங்கி வருகின்றனர். சிலர், தெரியாத ஊரில் இரவு நேரத்தில் விட்டு, விட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் ஆசிரமத்தில் சேரும் பலரும், கண்ணீரில் வாழ்ந்து வருகின்றனர். பெங்களூரு நகரில் உள்ள முதியோர் இல்லங்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். முதியோர் இல்லத்தில் சேர்த்த பிள்ளைகளை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களிடம், முதியோர் இல்லத்தில் இருந்து அவர்களின் பெற்றோரை அழைத்து செல்ல அறிவுறுத்தப்படுவர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பெற்றோரை சரியாக கவனிக்காத பிள்ளைகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.