மாண்டியா லோக்சபா தொகுதி சுற்றுப்பயணத்துக்கு நிகில் தயார்
மாண்டியா லோக்சபா தொகுதி சுற்றுப்பயணத்துக்கு நிகில் தயார்
மாண்டியா லோக்சபா தொகுதி சுற்றுப்பயணத்துக்கு நிகில் தயார்
ADDED : பிப் 10, 2024 06:09 AM

ம.ஜ.த., இளைஞரணி தலைவர் நிகில் குமாரசாமி, மாண்டியா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்புள்ளது. அவர் தொகுதி சுற்றுப்பயணத்தை துவக்குகிறார்.
லோக்சபா தேர்தலுக்கு, ம.ஜ.த.,வும் தயாராகி வருகிறது. முன்னாள் பிரதமரும், ம.ஜ.த., தேசிய தலைவருமான தேவகவுடா, மாநில தலைவர் குமாரசாமி உட்பட மற்ற தலைவர்கள் கட்சியை பலப்படுத்துகின்றனர். பெங்களூரில் தேவகவுடாவும், பிடதி பண்ணை வீடு, பெங்களூரின் கட்சி அலுவலகத்தில் குமாரசாமியும் அவ்வப்போது ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.
இம்முறை லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் ம.ஜ.த., கூட்டணி வைத்துள்ளது. கட்சிக்கு செல்வாக்குள்ள நான்கு தொகுதிகளை, ம.ஜ.த., 'குறி' வைத்துள்ளது. இவற்றில் மாண்டியாவும் ஒன்றாகும். மாண்டியா மாவட்டம், ம.ஜ.த.,வின் பாதுகாப்பு கோட்டை. 2018ல் இம்மாவட்டத்தின் ஏழு தொகுதிகளையும், இக்கட்சி கைப்பற்றியது. தற்போது சூழ்நிலை மாறியுள்ளது. கட்சியின் பலம் குறைந்துள்ளது.
கடந்த 2019ன் லோக்சபா தேர்தலின் போது, கர்நாடகாவில், காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசு இருந்தது. மாண்டியாவில் கூட்டணி வேட்பாளராக நிகில் குமாரசாமி களமிறங்கினார். ஆயினும், சுயேச்சை வேட்பாளர் சுமலதா அம்பரிஷிடம் தோல்வி அடைந்தார்.
தோற்ற தொகுதியிலேயே களமிறங்கி, வெற்றி பெற வேண்டும் என, மாண்டியாவில் நிகில் குமாரசாமியை களமிறக்கும்படி, தலைவர்கள், தொண்டர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். ம.ஜ.த.,வும் ஆலோசிக்கிறது. நிகிலும் தேர்தலுக்கு தயாராகிறார். பிப்ரவரி 19 முதல் மாவட்ட சுற்றுப்பயணத்தை துவக்க திட்டமிட்டுள்ளார்.
மாண்டியா மாவட்ட ம.ஜ.த., தலைவர் ரமேஷ் கூறியதாவது:
கட்சியின் இளைஞரணி தலைவரான நிகில் குமாரசாமி, மாண்டியா தொகுதியில் சுற்றுப்பயணத்தை துவக்கவுள்ளார். அதற்காக அவரே வேட்பாளர் என, கூற முடியாது. மாண்டியா தொகுதியில் தேவகவுடா, குமாரசாமி, நிகில் ஆகியோரில் ஒருவர் போட்டியிட வேண்டும் என, நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்\- நமது நிருபர் -.