தேர்தல் எதிரொலி: முடங்கிய பணியை முடிக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு
தேர்தல் எதிரொலி: முடங்கிய பணியை முடிக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு
தேர்தல் எதிரொலி: முடங்கிய பணியை முடிக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு
ADDED : ஜூன் 11, 2024 05:59 PM

சென்னை: தேர்தல் காலத்தில் முடங்கிய பணிகளை விரைந்து முடிக்க, அனைத்து மாவட்ட
கலெக்டர்கள், டி.ஆர்.ஓ., சப் - கலெக்டர்கள், ஆர்.டி.ஓ., தாசில்தார்
உட்பட வருவாய்த் துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுதும் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டது. மார்ச் 16ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அரசு அதிகாரிகள், அலுவலர்கள், வழக்கமான பணிகளிலிருந்து, தற்காலிகமாக தேர்தல் பணிக்கு மாறினர்.
பறக்கும் படை, வேட்பாளர் தேர்தல் செலவினங்களை கணக்கிடுவது, ஓட்டுப்பதிவு உட்பட தேர்தல் பணிகளில் பம்பரமாக சுழன்றனர். இதனால், வருவாய்த்துறை உட்பட அனைத்து அரசு துறைகளிலும் வழக்கமான நிர்வாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன..
பட்டா மாறுதல், நில அளவை, அரசு திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல், திட்ட பணிகள், நத்தம் புறம்போக்கு டிஜிட்டல் சேவை துவக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. லோக்சபா தேர்தல் முடிவடைந்ததால், 6ம் தேதியுடன் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதனால், அரசு துறை அலுவலர்கள், தேர்தல் பணியிலிருந்து விடுபட்டு, வழக்கமான தங்கள் பணிகளுக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் காலத்தில் முடங்கிய பணிகளை விரைந்து முடிக்க, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், டி.ஆர்.ஓ., சப் - கலெக்டர்கள், ஆர்.டி.ஓ., தாசில்தார் உட்பட வருவாய்த் துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.