ADDED : ஜூன் 11, 2024 05:55 PM
முடிச்சூர்: பழைய பெருங்களத்துார், மா.பொ.சி., தெருவைச் சேர்ந்தவர் விஜயா, 58. இவரது மகன் நாகராஜ், 38. நேற்று காலை, தாயும், மகனும், 'டி.வி,எஸ்., ஜுப்பிட்டர்' ஸ்கூட்டரில் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்றுவிட்டு, வீடு திரும்பினர்.
வெளிவட்ட சாலை வழியாக வந்து, தாம்பரம் - முடிச்சூர் சாலையில் திரும்பி, பெருங்களத்துார் நோக்கி சென்றனர். பார்வதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் வந்த டாரஸ் லாரி ஒன்று, முந்தி செல்லும்போது, ஸ்கூட்டரின் ஹேண்டில் லாரியில் சிக்கியது.
இருவரும், 15 அடி துாரம் இழுத்து செல்லப்பட்டதில், தாயும், மகனும் நிலை தாடுமாறி கீழே விழுந்து, லாரி சக்கரத்தில் சிக்கினர். இதில், விஜயா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். மகன் நாகராஜ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரான, படப்பையைச் சேர்ந்த ரமேஷ், 58, என்பவரை கைது செய்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
லாரிகள் அட்டகாசம்
முடிச்சூர் சாலையில், லாரிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வெளிவட்ட சாலை வழியாக சென்றால், 'டோல்கேட்' கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், பெரும்பாலான லாரிகள், முடிச்சூர் சாலை வழியாக சென்று, கிஷ்கிந்தா அருகே வெளிவட்ட சாலையை அடைகின்றன. அந்த வகையில், தினமும், ஏகப்பட்ட லாரிகள் அதிவேகமாக செல்கின்றன. மற்றொரு புறம், இச்சாலையில், காஸ், தனியார் கேபிள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்த இடங்களில், பள்ளத்தை முறையாக மூடாததால் பள்ளம், மேடாக இருப்பதாலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். இந்த காரணங்களால், தாம்பரம் - முடிச்சூர் சாலையில், சமீபகாலமாக விபத்துகள் அதிகரித்துள்ளன. ஆனால், சாலையை முறையாக பராமரிக்க வேண்டிய நெடுஞ்சாலைத் துறையோ, அலட்சியமாக செயல்படுவதாக பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டினர்.