'பபர் கல்சா'வுக்கு எதிராக சாட்டை 32 இடங்களில் என்.ஐ.ஏ. சல்லடை
'பபர் கல்சா'வுக்கு எதிராக சாட்டை 32 இடங்களில் என்.ஐ.ஏ. சல்லடை
'பபர் கல்சா'வுக்கு எதிராக சாட்டை 32 இடங்களில் என்.ஐ.ஏ. சல்லடை
ADDED : ஜன 12, 2024 02:26 AM
புதுடில்லி, தடை செய்யப்பட்ட, 'பபர் கல்சா' பயங்கரவாத அமைப்பு மற்றும் பிரபல தாதா லாரன்ஸ் பிஸ்னோய் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான, ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள, 32 இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தடை செய்யப்பட்ட பபர் கல்சா எனப்படும் பஞ்சாப் பிரிவினைவாத அமைப்பு மற்றும் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும், தாதா லாரன்ஸ் பிஸ்னோய் கூட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு பல வழக்குகளை பதிவு செய்துள்ளது.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு சதி திட்டங்களை தீட்டி, நம் நாட்டில் பயங்கர வாத செயல்களில் ஈடுபட்டது, ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக இந்த வழக்குகள் தொடரப்பட்டன.
இதில், மூன்று முக்கிய வழக்குகள் தொடர்பாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், யூனியன் பிரதேசங்களான டில்லி, சண்டிகரில் உள்ள, 32 இடங்களில் இந்த அமைப்புகளுக்கு தொடர்புடையோர் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.
இந்த சோதனையின்போது, இரண்டு பிஸ்டல்கள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 4.60 லட்சம் ரூபாய் ரொக்கம், பல ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
பயங்கரவாத அமைப்புகள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் ரவுடி கும்பல்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடந்ததாக, என்.ஐ.ஏ., தெரிவித்துள்ளது.