சாத்தியமும் இல்லை; ஏற்கவும் முடியாது மம்தா பானர்ஜி காட்டமான பதில் * ஒரே நாடு, ஒரே தேர்தல்
சாத்தியமும் இல்லை; ஏற்கவும் முடியாது மம்தா பானர்ஜி காட்டமான பதில் * ஒரே நாடு, ஒரே தேர்தல்
சாத்தியமும் இல்லை; ஏற்கவும் முடியாது மம்தா பானர்ஜி காட்டமான பதில் * ஒரே நாடு, ஒரே தேர்தல்
ADDED : ஜன 12, 2024 01:30 AM

கோல்கட்டா,''நாட்டில் தற்போதுள்ள கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்பதாலும், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை ஏற்க முடியாது,'' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையின் கீழ், லோக்சபா, சட்டசபை உள்ளிட்டவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக விவாதிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்படி, அரசியல் கட்சிகளுக்கு அந்தக் குழு கடிதம் எழுதியிருந்தது. குழுவின் செயலர் டாக்டர் நிதேன் சந்திராவுக்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
நாடு சுதந்திரம் பெற்ற பின், சில சந்தர்ப்பங்களில் லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது. ஆனால், ஆட்சி கவிழ்ப்பு உள்ளிட்ட காரணங்களால், அது முறிந்தது. தற்போது நம் நாட்டில் உள்ள தேர்தல் முறையானது, ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமைந்துள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற யோசனை, நம் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை அசைத்து பார்ப்பதாக உள்ளது; கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக உள்ளது. அதனால், கொள்கை அடிப்படையில் இது ஏற்கக் கூடியதாக இல்லை.
மேலும், தேசிய அளவில் எதேச்சதிகாரத்தை உருவாக்கும் வகையில் இந்த முறை உள்ளது. இதற்கு எதிராக உள்ள தால், இந்த அடிப்படையிலும் இதை ஏற்க முடியாது.
மேலும், இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. மத்தியில் உள்ள ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவானால், அதற்காக மாநிலங்களும் பாதிக்கப்பட வேண்டுமா.
இந்த விஷயத்தில் எவ்வித தெளிவும் இல்லாமல், ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றை திணிக்கும் முயற்சி நடக்கிறது.
அதனால், இந்த வகையிலும் இதை ஏற்க முடியாது.
கொள்கை அடிப்படையிலும், நடைமுறை சாத்தியம் இல்லாததாலும், உங்களுடைய இந்த யோசனையை ஏற்க முடியாது என்பதுடன், எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.