பார்க்கிங் சண்டையில் பக்கத்து வீட்டுக்காரரின் மூக்கு 'நறுக்'
பார்க்கிங் சண்டையில் பக்கத்து வீட்டுக்காரரின் மூக்கு 'நறுக்'
பார்க்கிங் சண்டையில் பக்கத்து வீட்டுக்காரரின் மூக்கு 'நறுக்'
ADDED : மே 29, 2025 04:51 AM

கான்பூர்: உத்தர பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இருவர் இடையே பார்க்கிங் தொடர்பாக எழுந்த சண்டையில் ஒருவரின் மூக்கை மற்றொருவர் கடித்து துப்பினார்.
நகர்ப்புறங்களில் கார் மற்றும் பைக்கை நிறுத்துவது தொடர்பாக அண்டை வீட்டினருடன் பிரச்னை ஏற்படுவது அதிகரித்துள்ளது. இந்த பிரச்னை அடிதடி முதல் கொலை வரை செல்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இதுபோன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது. கான்பூரின் நர்மு பகுதியில் ரத்தன் பிளானட் என்ற பெயரில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன.
அந்த குடியிருப்பு சங்கத்தின் செயலராக ஓய்வுபெற்ற பொறியாளர் ரூபேந்திர சிங் யாதவ் உள்ளார். அதே குடியிருப்பைச் சேர்ந்தவர் ஷிதேஜ் மிஸ்ரா. அவருக்கு என்று ஒதுக்கப்பட்ட கார் நிறுத்துமிடத்தில் வேறொருவர் காரை நிறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஷிதேஜ், குடியிருப்பு சங்க செயலர் ரூபேந்திர சிங்கிடம் புகார் கூறினார். அதற்கு அவர் இந்த விஷயத்தை காவலாளியிடம் கூறி பார்க்கச் சொல்கிறேன் என்றார். இதனால் ஆத்திரமடைந்த ஷிதேஜ் 'நீங்கள் உடனே கீழே இறங்கி வர வேண்டும்' என கத்தியுள்ளார்.
இதையடுத்து பார்க்கிங் பகுதிக்கு ரூபேந்திர சிங் சென்றார். அங்கு வந்த ஷிதேஜ், அவரின் மூக்கை கடித்தார். இந்த சம்பவம் குடியிருப்பில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
ரூபேந்திர சிங் என்ன நடந்தது என புரியாமல் சட்டையில் ரத்தம் சொட்ட சொட்ட நின்றிருந்தார். உடனிருந்த நபர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதுகுறித்து ரூபேந்திர சிங் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.