Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்ற கமலுக்கு எதிர்ப்பு! பாவம் வரலாறு தெரியாமல் பேசுகிறார்: சித்தராமையா

தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்ற கமலுக்கு எதிர்ப்பு! பாவம் வரலாறு தெரியாமல் பேசுகிறார்: சித்தராமையா

தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்ற கமலுக்கு எதிர்ப்பு! பாவம் வரலாறு தெரியாமல் பேசுகிறார்: சித்தராமையா

தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்ற கமலுக்கு எதிர்ப்பு! பாவம் வரலாறு தெரியாமல் பேசுகிறார்: சித்தராமையா

UPDATED : மே 29, 2025 05:06 AMADDED : மே 29, 2025 04:36 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: 'தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்' என கூறிய நடிகர் கமலுக்கு, கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பாவம், வரலாறு தெரியாமல் கமல் பேசுவதாக முதல்வர் சித்தராமையா காட்டமாக கூறியுள்ளார்.

'கமல் ஒரு பைத்தியம், நகர்ப்புற நக்சல்' என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். 'தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கமல் திரைப்படத்தை கர்நாடகாவில் ஓட விட மாட்டோம்' என கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கமல், சிம்பு நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவான தக் லைப் திரைப்படம் ஜூன் 5ல் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் பங்கேற்றார். நிகழ்ச்சியில் கமல் பேசுகையில், 'தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்' என்றார்.

இது தொடர்பான வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி, கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. பெங்களூரில் நேற்று முன்தினம், தக் லைப் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கமல், சிம்புவை வரவேற்று ரசிகர்கள் வைத்திருந்த பேனர்களை, கன்னட அமைப்பினர் கிழித்தனர்.

கமலின் பேச்சுக்கு, கர்நாடகா முழுதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பெங்களூரில் முதல்வர் சித்தராமையா நேற்று அளித்த பேட்டியில், ''கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உள்ளது. அது பற்றி கமலுக்கு தெரியவில்லை; பாவம், வரலாறு தெரியாமல் பேசுகிறார்,'' என்று காட்டமாக கூறினார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகையில், ''நடிகர் கமல் மனநலம் சரியில்லாதவர்; அவர் ஒரு பைத்தியம். கன்னட சினிமா துறை அவருக்கு நிறைய கொடுத்து உள்ளது. இதை எல்லாம் மனதில் வைத்திருந்தால், கன்னட மொழி பற்றி அவர் பேசி இருக்க மாட்டார். கொஞ்சமாவது நியாயமாக பேச வேண்டும். கமலை போன்ற நகர்ப்புற நக்சல்கள் இப்படி தான் பேசுவர்,'' என்றார்.

கன்னட வளர்ச்சி துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறுகையில், ''கன்னடம் குறித்து, நடிகர் கமல் தேவையில்லாத கருத்துகளை பேசி உள்ளார். கன்னட மக்கள் ஒருபோதும் இதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

''தன் கருத்துக்கு கமல் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லாவிட்டால், அவரது தக் லைப் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்படும். இது தொடர்பாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுதுவேன்,'' என்றார்.

கமலை கண்டித்து, பெலகாவியில் நேற்று கன்னட அமைப்பினர் நடத்திய போராட்டத்தில், கமலின் உருவப்படத்திற்கு தீ வைக்கப்பட்டது. உருவப்படத்தை செருப்பால் அடித்தும் தங்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். கமல் கருத்துக்கு, கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே, கமல் கருத்தை, தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். 'தமிழில் இருந்து தான் கன்னட மொழி பிறந்தது. இது தான் வரலாற்று உண்மை' என, சீமான், அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்டோர் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மன்னிப்பு கேட்க முடியாது


என் கருத்தை, என் அருகில் இருந்து பார்த்தால் சரியாக தெரியும். உங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தால், அது தவறாக தோன்றும். அன்பு மிகுதியால் நான் அப்படி பேசினேன். இந்த விஷயத்தில் அவர்கள் குழம்பி உள்ளனர். மொழி பற்றி வரலாற்று அறிஞர்கள் எனக்கு கற்று கொடுத்துள்ளனர். மொழிகள் பற்றி பேச, அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை. அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது.

- கமல் ஹாசன்

தலைவர், மக்கள் நீதி மய்யம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us