சிக்கமகளூரு சொகுசு விடுதியில் குமாரசாமி ரகசிய ஆலோசனை
சிக்கமகளூரு சொகுசு விடுதியில் குமாரசாமி ரகசிய ஆலோசனை
சிக்கமகளூரு சொகுசு விடுதியில் குமாரசாமி ரகசிய ஆலோசனை
ADDED : ஜன 11, 2024 11:43 PM

சிக்கமகளூரு: லோக்சபா தேர்தல் குறித்து, ஒரு பக்கம் தேசிய கட்சிகள் ஆலோசனை நடத்தினால், மற்றொரு பக்கம் ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி, சொகுசு விடுதியில் ரகசிய ஆலோசனை நடத்தினார்.
லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ., காங்கிரஸ் ஆயத்தமாகி வருகிறது. இரு கட்சிகளும் மாநிலத்தின் முக்கிய தலைவர்களுடன் முதல் கட்ட ஆலோசனையை முடித்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி, சிக்கமகளூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இரண்டு நாட்களாக ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார். 10 அறைகளை வாடகைக்கு எடுத்து, முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, தான் போட்டியிடுவது குறித்தும் கருத்து கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், சிக்கமகளூரில் நேற்று குமாரசாமி கூறியதாவது:
லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் ம.ஜ.த.,வின் சாதாரண தொண்டர் போட்டியிட்டாலும் வெற்றி பெறும் சூழல் நிலவுகிறது.
கடந்த முறை தேர்தல் வேறு மாதிரியாக இருந்தது. விவசாய சங்கம், பா.ஜ., காங்கிரஸ் உட்பட பலரும், சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். இம்முறை சூழல் மாறி விட்டது.
பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளதால், இம்முறை நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. தற்போதைக்கு வேட்பாளர் இறுதி செய்யப்படவில்லை. இரண்டாம் கட்டமாக மீண்டும் ஆலோசிக்கப்படும்.
இரண்டு நாட்கள் கூட்டத்தில், மாண்டியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த மாநில அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கட்சி தொண்டர்களை சந்தித்து ஆதரவு பெற வேண்டும். பா.ஜ., தலைவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.