Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சாலையில் அமர்ந்து கேரள கவர்னர் தர்ணா!: ஆளுங்கட்சி போராட்டத்தால் கோபம்

சாலையில் அமர்ந்து கேரள கவர்னர் தர்ணா!: ஆளுங்கட்சி போராட்டத்தால் கோபம்

சாலையில் அமர்ந்து கேரள கவர்னர் தர்ணா!: ஆளுங்கட்சி போராட்டத்தால் கோபம்

சாலையில் அமர்ந்து கேரள கவர்னர் தர்ணா!: ஆளுங்கட்சி போராட்டத்தால் கோபம்

UPDATED : ஜன 28, 2024 01:51 PMADDED : ஜன 28, 2024 12:09 AM


Google News
Latest Tamil News
கொல்லம்: கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கொல்லம் மாவட்டத்துக்கு வந்த கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாணவர் அமைப்பான, எஸ்.எப்.ஐ., எனப்படும் இந்திய மாணவர் கூட்டமைப்பினர் கருப்புக் கொடி காட்டினர். இதனால் ஆத்திரம் அடைந்த கவர்னர், பாதி வழியில் வாகனத்தில் இருந்து இறங்கி, சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் துவக்கம் முதலே முட்டல், மோதல் நிலவி வருகிறது. கவர்னருக்கு எதிராக, மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

நடவடிக்கை


இந்நிலையில், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரா என்ற இடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, கவர்னர் ஆரிப் முகமது கான் நேற்று சென்றார். அப்போது செல்லும் வழியில், நிலமேல் என்ற இடத்தில், எஸ்.எப்.ஐ., அமைப்பினர், கவர்னருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டினர். மேலும், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த கவர்னர் ஆரிப் முகமது கான், தன் வாகனத்தை நிறுத்தினார். மேலும், கருப்புக் கொடி காட்டிய எஸ்.எப்.ஐ., அமைப்பினரை நோக்கி சென்றார். உடனே சுதாரித்த போலீசார், பாதுகாப்பை பலப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு செல்லும்படி கவர்னர் ஆரிப் முகமது கானிடம் போலீசார் தெரிவித்தனர். இதை ஏற்காத அவர், நாற்காலியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

''போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை, இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்,'' என, கவர்னர் ஆரிப் முகமது கான் காட்டமாக கூறினார். போலீசாரின் சமாதானத்தை ஏற்க மறுத்த அவர், அவர்களை கடிந்து கொண்டார். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் தர்ணாவில் ஈடுபட்ட கவர்னர் ஆரிப் முகமது கான், எஸ்.எப்.ஐ., அமைப்பைச் சேர்ந்த 17 பேர் மீது, ஜாமினில் வெளி வர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்ததற்கான, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவலறிக்கையின் நகலை பெற்ற பின், நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

இது குறித்து, கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியதாவது:கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் சட்ட விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறார். அவருக்கு மாநிலத்தின் மீதும், மாநில மக்களின் மீதும் எந்த அக்கறையும் இல்லை. குற்றச் செயல்களில் ஈடுபடும், எஸ்.எப்.ஐ., அமைப்பினருக்கு அவர் தான் பாதுகாப்பு வழங்கி வருகிறார்.

அனுமதி


சாலையில் போலீசாருடன் போராட்டக்காரர்கள் நிற்க அனுமதி வழங்கியது யார்? முதல்வர் சென்றால் இப்படி அனுமதி வழங்குவரா? என் வாகனத்தை தாக்கவும் முயன்றனர்.போலீசாரே சட்டத்தை மீறினால், நிலைநாட்டுவது யார்? நான் எந்த போராட்டத்திலும் ஈடுபடவில்லை. எப்.ஐ.ஆர்., நகல் வரும் வரை காத்திருந்தேன்; அவ்வளவு தான். இவ்வாறு அவர் கூறினார்.

நெருப்புடன் விளையாடுகிறார்!

கேரளாவில் அரசியலமைப்பு கடமைகளை செய்வதில், முதல்வர் பினராயி விஜயன் தோல்வி அடைந்து விட்டார். இது போன்ற செயல்களால், கவர்னரை தடுக்க முடியாது. முதல்வர் பினராயி விஜயன், நெருப்புடன் விளையாடுகிறார். முரளீதரன் வெளியுறவு இணை அமைச்சர், பா.ஜ.,



எல்லாவற்றிலும் அரசியல்!

பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, சாலையில் அமர்ந்து கவர்னர் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது. எல்லா விஷயத்தையும் அவர் அரசியலாக்குகிறார். பினராயி விஜயன் கேரள முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூ.,



'இசட் பிளஸ்' பாதுகாப்பு!

கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு, 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இதன்படி, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துப்பாக்கி ஏந்திய வீரர்கள், கவர்னருக்கு சுழற்சி முறையில், 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us