Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மராத்தா இட ஒதுக்கீடு கோரிக்கை ஏற்பு போராட்டத்தை வாபஸ் பெற்ற ஜரங்கே

மராத்தா இட ஒதுக்கீடு கோரிக்கை ஏற்பு போராட்டத்தை வாபஸ் பெற்ற ஜரங்கே

மராத்தா இட ஒதுக்கீடு கோரிக்கை ஏற்பு போராட்டத்தை வாபஸ் பெற்ற ஜரங்கே

மராத்தா இட ஒதுக்கீடு கோரிக்கை ஏற்பு போராட்டத்தை வாபஸ் பெற்ற ஜரங்கே

ADDED : ஜன 27, 2024 11:53 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: மஹாராஷ்டிராவில் மராத்தா சமூக இடஒதுக்கீடு விவகாரத்தின் கோரிக்கைகள் மாநில அரசால் ஏற்கப்பட்டதை அடுத்து, தன் உண்ணாவிரதப் போராட்டத்தை சமூக ஆர்வலர் மனோஜ் ஜரங்கே நேற்று முடித்துக் கொண்டார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

உண்ணாவிரதம்


மாநிலத்தில் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, அதன் தலைவரும், சமூக ஆர்வலருமான மனோஜ் ஜரங்கே பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறார்.

இதன் அடுத்த கட்டமாக, ஜல்னா மாவட்டத்தில் இருந்து மும்பையை நோக்கிய நடைபயணத்தை கடந்த 20ல் துவங்கிய அவர், நேற்று முன்தினம் நவி மும்பை வந்தடைந்தார்.

அவருக்கு மராத்தா சமூகத்தினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மராத்தா சமூகத்தினரை சமூக, கல்வி ரீதியாக பின் தங்கிய வகுப்பினராக அறிவித்து, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இட ஒதுக்கீடு தரக்கோரி மனோஜ் ஜரங்கே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார்.

அனைத்து மராத்தியர்களுக்கும் குன்பி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ், மழலையர் பள்ளி முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு போன்றவற்றை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அவரது போராட்டத்தால் மும்பையில் பதற்றமான சூழல் உருவானது. ஆயிரக்கணக்கானோர், ஜரங்கேயுடன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவின்படி, மாநில அமைச்சர்கள் இருவர் அவருடன் பேச்சு நடத்தினர். மராத்தா சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அப்போது அரசு தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக மனோஜ் ஜரங்கே நேற்று அறிவித்தார்.

கணக்கெடுப்பு


போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஜரங்கேவுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

அப்போது ஷிண்டே கூறுகையில், ''மராத்தா சமூகத்தினர் தொடர்பான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அது முடிவுக்கு வந்ததும் அவர்களின் கோரிக்கைகள் முழுதும் நிறைவேற்றப்படும்,'' என்றார்.

இது குறித்து மனோஜ் ஜரங்கே கூறுகையில், ''அரசின் அறிவிப்பு நடைமுறைப்படுத்தாவிட்டால், மும்பையில் மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us