கடமை தவறினால் கடுமையான நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
கடமை தவறினால் கடுமையான நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
கடமை தவறினால் கடுமையான நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
ADDED : ஜூன் 30, 2025 06:58 PM

சென்னை: ''போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்'' என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்து உள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நகை திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோவில் தற்காலிக ஊழியர் அஜித்குமார், 29, மரணம் அடைந்தார். இது தமிழகத்தில் விவாத பொருளாகி உள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் அரசை விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில், அவரை தாக்கியதாக போலீசார் ஆறு பேரை சஸ்பெண்ட் செய்து சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ் குமார், டி.ஜி.பி., சங்கர் ஜிவால், பொதுத்துறை செயலர் ரீட்டா ஹர்ஷ் தக்கர், போலீஸ் துறை இயக்குநர்(நிர்வாகம்) வெங்கட்ரமன், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், போலீசாரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.
போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.