2வது வழக்கில் கிடைத்தது ஜாமின் நாராயண கவுடா 3வது முறை கைது
2வது வழக்கில் கிடைத்தது ஜாமின் நாராயண கவுடா 3வது முறை கைது
2வது வழக்கில் கிடைத்தது ஜாமின் நாராயண கவுடா 3வது முறை கைது
ADDED : ஜன 10, 2024 10:54 PM

பெங்களூரு: கர்நாடகா ரக் ஷன வேதிகே தலைவர் நாராயண கவுடா மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டு உள்ளார். இரண்டாவது வழக்கில் ஜாமின் கிடைத்து, சிறையில் இருந்து வெளியே வந்தவரை, சிறைவாசலில் போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகாவில் உள்ள கடைகளில், பெயர் பலகையை கன்னடத்தில் வைக்க கோரி, கடந்த மாதம் பெங்களூரில் கர்நாடகா ரக் ஷன வேதிகே அமைப்பினர் ஊர்வலம் சென்றனர். கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆங்கில பெயர் பலகையை, அடித்து, நொறுக்கினர்.
இந்த வழக்கில் கர்நாடகா ரக் ஷன வேதிகே தலைவர் நாராயண கவுடா உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 6ம் தேதி தேவனஹள்ளி 5 வது கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றம், நாராயண கவுடாவுக்கு ஜாமின் வழங்கியது.நேற்று முன்தினம் காலை அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆனால் கடந்த 2017ல் நடந்த ஒரு போராட்டத்தில், பொது சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், சிறை வாசலில் வைத்தே நாராயண கவுடாவை, குமாரசாமி லே - அவுட் போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமின் கேட்டு, நாராயண கவுடா வக்கீல், பெங்களூரு 30 வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி திம்மய்யா, நாராயண கவுடாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். இதனால், நேற்று மதியம் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் சிறைவாசலில் காத்திருந்த, ஹலசூரு கேட் போலீசார், நாராயண கவுடாவை கைது செய்தனர். கொரோனா நேரத்தில் தடையை மீறி ஊர்வலம் நடத்தியதாக, நாராயண கவுடா மீது, ஹலசூரு கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால், நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து இருந்தது. இதனால், அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
***