எத்தனால் கலந்த பெட்ரோல்; இலக்கு எட்டி விட்டதாக மத்திய அரசு தகவல்
எத்தனால் கலந்த பெட்ரோல்; இலக்கு எட்டி விட்டதாக மத்திய அரசு தகவல்
எத்தனால் கலந்த பெட்ரோல்; இலக்கு எட்டி விட்டதாக மத்திய அரசு தகவல்
ADDED : மார் 20, 2025 04:18 AM

புதுடில்லி: பெட்ரோலில், 20 சதவீதம் அளவுக்கு எத்தனாலை கலக்கும் இலக்கை நெருங்கி விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை இணையமைச்சர் நிமுபென் ஜெயந்திபாய், எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் நேற்று கூறியதாவது:
கரும்புச்சாறு, சர்க்கரை போன்ற கரும்பு சார்ந்த பொருட்கள் மற்றும் அரிசி உள்ளிட்ட வீணாகும் உணவு தானியங்களில் இருந்து பெட்ரோலில் கலப்பதற்கான எத்தனால், தயாரிக்கப்படுகிறது. எண்ணெய் தேவையை கருத்தில் வைத்து, பெட்ரோலில் எத்தனாலை கலப்பதற்கான அனுமதி மற்றும் அளவீடு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலப்பதற்கு கடந்த 2022-ல் சட்ட திருத்தம் செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஜூன் 2022-ல், 10 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தி செய்தன. இந்த அளவு படிப்படியாக அதிகரித்து, 2025, பிப்ரவரி நிலவரப்படி, 19.68 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தி செய்துள்ளன.
இதற்காக கடந்த 4 மாதங்களில் எண்ணெய் நிறுவனங்களுக்கு சுமார் 280 கோடி லிட்டர் எத்தனால் வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.