ஆமதாபாத் விமான விபத்தில் விமானிகளை குற்றஞ்சாட்டுவது துரதிருஷ்டம்: சுப்ரீம் கோர்ட் கண்டனம்
ஆமதாபாத் விமான விபத்தில் விமானிகளை குற்றஞ்சாட்டுவது துரதிருஷ்டம்: சுப்ரீம் கோர்ட் கண்டனம்
ஆமதாபாத் விமான விபத்தில் விமானிகளை குற்றஞ்சாட்டுவது துரதிருஷ்டம்: சுப்ரீம் கோர்ட் கண்டனம்
ADDED : செப் 23, 2025 01:32 AM

'ஆமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் விமானிகள் மீது குற்றஞ்சாட்டுவது பொறுப்பற்ற செயல்; துரதிருஷ்டவசமானது' என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு புறப்பட்ட 'ஏர் இந்தியா' விமானம், மேலெழும்பிய சில வினாடிகளுக்குள், விமான நிலையத்தின் அருகில் இருந்த மருத்துவ விடுதி மீது மோதி விபத்துக்குள்ளானது.
விசாரணை அறிக்கை
இந்த பயங்கர விபத்தில், விமானத்தில் பயணம் செய்த பயணியர், ஊழியர்கள் உட்பட 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் விமானத்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். விடுதியில் இருந்தவர்களில் 19 பேர் பலியாகினர்.
விபத்து தொடர்பாக நடந்த விசாரணையில், எரிபொருள் கட்டுப்பாட்டு 'ஸ்விட்ச்'கள் 'கட் ஆப்' ஆனதே, விமானம் கீழே விழுந்து நொறுங்க காரணம் என கூறப்பட்டது.
மேலும், சி.வி.ஆர்., எனப்படும், விமானிகள் அறையின் குரல் பதிவு கருவியில், விமானிகள் இடையே நடந்த உரையாடலும் வெளியானது.
அதில், 'எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்சுகளை யார் ஆப் செய்தது' என, ஒரு விமானி கேட்க, மற்றொரு விமானி, 'அதை நான் செய்யவில்லை' என கூறுகிறார்.
இதனால், விமானிகளின் கவனக்குறைவே விபத்துக்கு காரணமாக பேசப்பட்டது. இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்து குறித்து, நீதிமன்ற கண்காணிப்புடன் விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
'சேப்டி மேட்டர்ஸ் பவுண்டேஷன்' என்ற தொண்டு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
முதற்கட்ட விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்வதற்கு முன்பாகவே, அமெரிக்காவின் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நாளிதழ் விமான விபத்து குறித்து ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது.
அதன் பின், அரசு தரப்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதை படித்த அனைவரும், விபத்துக்கு விமானியின் தவறே காரணம் என்ற கோணத்தில் பேச ஆரம்பித்து விட்டனர்.
ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய இரு விமானிகளும் நல்ல அனுபவசாலிகள். அப்படி இருந்தும், அவர்களில் ஒரு விமானி தற்கொலை செய்தது போலவும், எரிபொருள் ஸ்விட்சை அவர் தான் அணைத்தது போலவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
விமானத்தின் கருப்பு பெட்டி மற்றும் காக்பிட் குரல் பதிவு கருவிகளில் பதிவான முழு உரையாடல்கள், அறிக்கையில் வெளியிடப்படவில்லை. அதற்குள்ளாகவே, விமானியின் தவறு காரணமாகவே விபத்து நடந்ததாக எப்படி கூற முடியும்? இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
சாதகமாக மாறிவிடும்
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
விமானியின் தவறு காரணமாகவே விபத்து நடந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது மிகவும் துரதிருஷ்டவசமானது. அதிலும் ஒரு விமானி தற்கொலை செய்ததாக செய்தி வெளியிடுவது மிகவும் பொறுப்பற்ற செயல்.
எதிர்பாராதவிதமான இந்த குற்றச்சாட்டுகள், போட்டி விமான நிறுவனங்களுக்கு சாதகமாக மாறிவிடும்.
நாளையே விமானிகள் மீது தான் தவறு என யாரோ சிலர் இந்த அறிக்கையை வைத்து பொறுப்பு இல்லாமல் குற்றஞ்சாட்டினால், அவர்களது குடும்பத்தினர் தான் பாதிக்கப்படுவர்.
தவிர, இறுதி விசாரணை அறிக்கையில், விமானிகள் மீது எந்த தவறும் இல்லை என நிரூபிக்கப்பட்டால் என்ன ஆகும்? எனவே, முழு விசாரணை முடியும் வரை ரகசியம் காக்கப்பட வேண்டும்.
மேலும், விமான விபத்து தொடர்பாக, வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்த வேண்டும் என, மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு உத்தர விடுகிறோம்.
விசாரணை பாரபட்சம் இல்லாமல், நேர்மையாக நடக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை நியாயமானதே.
அதே நேரம், வெளியே தெரிய வந்த உண்மைகள் அனைத்தையும் வெளியிட வேண்டும் என்பது விசாரணை நிலையை பாதிக்கும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -