Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கேதார்நாத் செல்ல ஆர்வம் அதிகரிப்பு

கேதார்நாத் செல்ல ஆர்வம் அதிகரிப்பு

கேதார்நாத் செல்ல ஆர்வம் அதிகரிப்பு

கேதார்நாத் செல்ல ஆர்வம் அதிகரிப்பு

Latest Tamil News
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள, 'சார்தாம்' எனப்படும் நான்கு புண்ணிய தலங்களில் ஒன்றான கேதார்நாத்துக்கு பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை, இந்தாண்டில் அதிகரித்துள்ளது. கடந்த 25 நாட்களில் மட்டும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலத்தில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புண்ணிய தலங்களுக்கு பயணம் செய்வது, ஹிந்துக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

11,755 அடி


இமயமலையில் அமைந்துள்ள இந்த இடங்களுக்கு பயணம் செய்வது, ஒரு புதிய மற்றும் வித்தியாசமான அனுபவத்தையும் தரும்.

உயரமான மலையின் மேல் அமைந்துள்ள கோவில்களுக்கு மலையேற்றம் செய்து செல்வது வாழ்வில் இதுவரை காணாத புதிய உற்சாகத்தை தரும்.

இந்தியா - பாகிஸ்தான் மோதல்கள் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக, சுற்றுலா வருவோர் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டில் கடந்த 2ம் தேதி, கேதார்நாத் கோவில் நடை திறக்கப்பட்டதில் இருந்து, மக்கள் அதிகளவில் வருகின்றனர். கேதார்நாத்துக்கு மட்டும், ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் யாத்திரை மேற்கொண்டு உள்ளனர்.

வட மாநிலங்களில் தற்போது கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ருத்ரபிரயாக் மாவட்டத்தில், கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோவிலுக்கு பயணம் மேற்கொள்வோர், சில முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

மொத்தம் 16 கி.மீ.,


மொத்தம் 16 கி.மீ., துாரத்துக்கு மலையேறி செல்ல வேண்டும் என்பதால், அதற்கேற்ப உடற்தகுதி உள்ளதா என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்.

தற்போது ஹெலிகாப்டர் வசதி உள்ளது. ஆனாலும், ஜூன் மாதம் இறுதிவரை முன்பதிவு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனால், போலி விளம்பரங்களையோ, சமூக வலைதளங்களையோ பார்த்து ஏமாற வேண்டாம் என, போலீசார் எச்சரிக்கின்றனர்.

மலையேறி செல்வதாக இருந்தால், சாதாரணமாக 7 முதல் 10 மணி நேரமாகும். இங்கு சீதோஷ்ண நிலையை எப்போதும் கணிக்க முடியாது.

4 - 5 மணி நேரம்


கடுமையான வெயில் இருக்கலாம், மழை பெய்யலாம் அல்லது குளிர் இருக்கலாம். அதனால், இதற்கேற்ப, தேவையான உடைகள் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும்.

யாத்திரை மேற்கொள்வதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே, தினமும் நடைபயிற்சி செய்து வந்தால், மலையேறும்போது சிரமம் சற்று குறைவாக இருக்கும்.

இரவு நேரத்தில், கேதார்நாத்தில் தங்குவதை தவிர்க்கும்படி டாக்டர்கள் கூறுகின்றனர். மிகவும் உயரமான இடத்தில் இருப்பதால், இங்கு ஆக்சிஜன் அளவு சற்று குறைவாக இருக்கும்.

வயதானவர்கள், யாத்திரைக்கு முன்பாக, முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக இதய நோய்கள், சுவாச பிரச்னை உள்ளவர்கள், பரிசோதனை செய்து, தேவையான மருந்துகளை கையில் வைத்திருக்க வேண்டும்.

மலையேறுவதில் சிரமம் இருப்பவர்களுக்கு, உயரம் குறைவான குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகள் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன் வாயிலாக, 4 - 5 மணி நேரத்தில் மலைக்கு சென்று விட முடியும். முதல் முறை, குதிரையில் பயணிப்பவர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தாலும், உடல் சோர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.

கடந்த 23ம் தேதி நிலவரப்படி, கேதார்நாத்துக்கு, 5.02 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். பத்ரிநாத்துக்கு, 3.34 லட்சம்; யமுனோத்ரிக்கு, 2.32 லட்சம்; கங்கோத்ரிக்கு, 2.18 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக உத்தராகண்ட் அரசு கூறுகிறது.

இந்த சார்தாம் யாத்திரை என்பது, ஆன்மிக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், சுற்றுலா வாயிலாக உத்தராகண்டின் பொருளாதாரம் உயர்வதுடன், சார்தாம் பகுதிகளை ஒட்டியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் பெருக்குகிறது.

கேதார்நாத் கோவில், உத்தராகண்ட். கோப்பு படம்

- நமது சிறப்பு நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us