கொலை வழக்கில் கைதான பேராசிரியை வேதியியல் அறிவால் வாதாடி அசத்தல்
கொலை வழக்கில் கைதான பேராசிரியை வேதியியல் அறிவால் வாதாடி அசத்தல்
கொலை வழக்கில் கைதான பேராசிரியை வேதியியல் அறிவால் வாதாடி அசத்தல்
ADDED : மே 30, 2025 03:02 AM

போபால்: மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில், சமீபத்தில் கணவரை கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியை மம்தா பதக், 60, வழக்கு விசாரணையின்போது தன் வேதியியல் புலமையை வைத்து வாதாடிய விதம், வழக்கறிஞர்களை ஆச்சரியப்படுத்தியது.
மத்திய பிரதேச மாநிலம், சத்தார்பூரைச் சேர்ந்த வேதியியல் பேராசிரியை மம்தா பதக், 60. இவரது கணவர் நீரஜ் பதக் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம்.
கடந்த 2021ல் மம்தா, தன் மகனுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, கணவர் தீக்காயங்களுடன் இறந்து கிடந்ததாக போலீசுக்கு தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தினர்.
பெரிய தப்பு
அவர்கள் கூறுகையில், 'கணவர் நீரஜுக்கு மம்தா துாக்க மாத்திரை தந்து துாங்க வைத்து, அதன் பின் மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்துள்ளார். இதுகுறித்து தன் வீட்டு கார் டிரைவரிடம், 'பெரிய தப்பு செய்துவிட்டேன்' என ஒப்புக்கொண்டும் உள்ளார். 'பிரேத பரிசோதனை அறிக்கையிலும் மின்சார பாய்ந்ததால் உடலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது' என்றனர்.
இதை விசாரித்த சத்தார்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், மம்தா பதக்கை குற்றவாளி என அறிவித்து ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் நடந்தது. அப்போது, வேதியியல் பேராசிரியையான மம்தா பதக், தன் தரப்பு வாதங்களை தானே முன் வைத்தார். மனித திசுவில் மின்சாரம் எவ்வாறு வினைபுரியும் என்பது போன்ற சிக்கலான வேதியியல் விளக்கங்களை வழங்கினார்.
மேலும், 'தீ விபத்தால் உடலில் காயம் ஏற்பட்டதா அல்லது மின்சாரம் பாய்ந்து தீக்காயம் ஏற்பட்டதா என்பதை வெறுமனே கண்ணால் பார்த்து கூறிவிட முடியாது.
துல்லியமான முடிவு
'பிரேத பரிசோதனையில், கண்ணால் பார்த்து தான் அறிக்கை அளித்துள்ளனர். காயமடைந்த திசுவை அமில அடிப்படையிலான ஆய்வக பிரிப்பு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அப்போது தான் துல்லியமான முடிவுக்கு வர முடியும்' என்றார்.
அவரது வாதங்களை கேட்டு வழக்கறிஞர்கள் ஆச்சரியமடைந்தனர். அவர் கூறியவற்றை குறிப்பெடுத்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.