கர்நாடகா பொதுப்பணித் துறைக்கு வருமான வரித் துறை... நோட்டீஸ்!
கர்நாடகா பொதுப்பணித் துறைக்கு வருமான வரித் துறை... நோட்டீஸ்!
கர்நாடகா பொதுப்பணித் துறைக்கு வருமான வரித் துறை... நோட்டீஸ்!
ADDED : ஜன 05, 2024 04:54 AM
பெங்களூரு : ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட பண விபரங்கள் உட்பட பல்வேறு விபரங்களை சமர்ப்பிக்கும்படி, கர்நாடகா பொதுப்பணித்துறைக்கு, வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெங்களூரில் இரண்டு மாதங்களுக்கு முன்பு, பிரபல ஒப்பந்ததாரர்கள் வீடுகளில், வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்தனர்.
அப்போது, கோடிக்கணக்கான ரொக்க பணம், முறைகேடாக சம்பாதித்த சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பணம், தெலுங்கானா சட்டசபை தேர்தல் செலவுக்காக காங்கிரஸ் தலைவர்களுக்கு வழங்கப்படவிருந்ததாக, பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டினர்.
ரகசிய தகவல்
இதுகுறித்து, வருமானவரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அந்த பணம் எப்படி வந்தது, யாருக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது ஆகியவை குறித்து வருமான வரித்துறை விசாரித்து வருகிறது.
இதற்கிடையில், லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், காங்கிரஸ் தரப்பில் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். ஆளுங்கட்சிக்கு ஒப்பந்ததாரர்கள் பணம் சேகரித்து வருவதாக, வருமானவரித் துறைக்கு ரகசிய தகவல் பறந்துள்ளது.
இதையடுத்து, கர்நாடகா மீது வருமானவரித் துறை கண் வைத்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின், எந்தெந்த ஒப்பந்ததாரர்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டுள்ளது; அவர்கள் செய்த பணி விபரம்; டெண்டர், பில், ரசீது உட்பட பல்வேறு விபரங்களை தாக்கல் செய்யும்படி, பொதுப்பணித்துறைக்கு வருமான வரித்துறை உளவு மற்றும் குற்றவியல் விசாரணை பிரிவு கூடுதல் இயக்குனர் நோட்டீஸ் அனுப்பிஉள்ளார்.
மேலும், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகம் முகவரி, மொபைல் எண், இமெயில் முகவரி, பான் அட்டை, ஜி.எஸ்.டி., சான்றிதழ் போன்ற விபரங்களை இமெயில் வாயிலாக அனுப்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூன்றாவது நோட்டீஸ்
ஏற்கனவே செப்டம்பர், நவம்பர் மாதங்களில் இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், பதில் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது, 3வது முறையாக நோட்டீஸ் வந்துள்ளதால், அதிகாரிகள் திக்குமுக்காடி போயுள்ளனர்.
பொதுப்பணித்துறையின் அனைத்துப் பிரிவு தலைமை பொறியாளர்களுக்கும், துறையின் முதன்மை செயலர் தரப்பில், கடிதம் அனுப்பி, வருமானவரித் துறை கேட்கப்பட்டுள்ள தகவல்களை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிர்ச்சி
தாங்கள் கேட்டுள்ள விபரங்கள் கிடைத்த பின், வருமானவரித் துறை அதிகாரிகள் பட்டியலிட்டு, ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் சோதனை நடத்த வாய்ப்பு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வருமானவரித் துறை தயாரிக்கும், பட்டியலில் தங்கள் பெயர்கள் இருக்குமோ என்று முறைகேடில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சியில் உறைந்துஉள்ளனர்.