டெங்குவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை; அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
டெங்குவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை; அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
டெங்குவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை; அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
ADDED : ஜூலை 10, 2024 05:01 PM

பெங்களூரு: பெங்களூரு உட்பட மாநிலம் முழுதும் டெங்கு பரவுவதை தீவிரமாக கருதிய கர்நாடக ஐகோர்ட் தானாக முன் வந்து, பொது நலன் வழக்காக பதிவு செய்து, அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரு, துமகூரு உட்பட பல்வேறு மாவட்டங்களில் திடீரென டெங்கு அதிகரித்துள்ளது. உயிரிழப்பும் நடந்துள்ளன. நாளுக்கு நாள் டெங்கு அதிகரிப்பதால், 'மெடிக்கல் எமர்ஜென்சி' அறிவிக்கும்படி, பெங்களூரு ரூரல் பா.ஜ., - எம்.பி., டாக்டர் மஞ்சுநாத் வலியுறுத்தி உள்ளார். டெங்கு அதிகரிப்பதால், மக்கள் பீதியில் உள்ளனர். மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி, உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆங்கில நாளிதழ் ஒன்றில், ராய்ச்சூரின் விஜயகுமார் என்பவர் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில் 'மாநிலத்தில் டெங்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மாநில அரசு 'மருத்துவ அவசர சூழ்நிலை' அறிவிக்க வேண்டும். டெங்குவை கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறை மந்தமாக செயல்படுவதால், சூழ்நிலையை மோசமாக்குகிறது' என குற்றஞ்சாட்டியிருந்தார். இதை கர்நாடக ஐகோர்ட் தீவிரமாக கருதுகிறது.
தானாகவே முன்வந்து பொது நலன் வழக்காக, கர்நாடக ஐகோர்ட் பதிவு செய்து கொண்டது. டெங்கு அதிகரிப்பு குறித்து, கவலை தெரிவித்த ஐகோர்ட், பரிசோதனை அளவை அதிகரிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. டெங்குவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை, கிராமப்புறங்களில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருத்துவ வசதிகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.