உதிரி பாகங்கள் டீலர் கொலையில் 'திடுக்' ரூ.5 லட்சத்தையும் பறித்து கொன்ற கும்பல்
உதிரி பாகங்கள் டீலர் கொலையில் 'திடுக்' ரூ.5 லட்சத்தையும் பறித்து கொன்ற கும்பல்
உதிரி பாகங்கள் டீலர் கொலையில் 'திடுக்' ரூ.5 லட்சத்தையும் பறித்து கொன்ற கும்பல்
ADDED : ஜன 11, 2024 03:41 AM

ஞானபாரதி: ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் டீலர் கொலையில், கோவாவில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு ஞானபாரதி உல்லாலில் வசித்தவர் குருசித்தப்பா, 40. ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் விற்பனை டீலராக இருந்தார். கடந்த மாதம் 30ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
சிறிது நேரத்தில் மனைவிக்கு போன் செய்து, அவசரமாக 5 லட்சம் தேவைப்படுகிறது. உல்லால் ஏரிக்கரை பகுதிக்கு எடுத்து வரும்படி கூறினார். அதன்படி மனைவியும் பணத்தை எடுத்து வந்து கொடுத்தார்.
சிறிது நேரத்தில் வீட்டிற்கு வருவதாக கூறி மனைவியை, குருசித்தப்பா அனுப்பி வைத்தார். ஆனால் அவர் வரவில்லை. அவரது மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.
உடல் மீட்பு
'கணவரை காணவில்லை' என, ஞானபாரதி போலீசில் மனைவி புகார் அளித்தார். கடந்த 3ம் தேதி, பெங்களூரு ரூரல் மஞ்சினபெலே அணையை ஒட்டியுள்ள வனப்பகுதியில், குருசித்தப்பாவின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அவரை யாரோ கத்தியால் குத்திக் கொன்றதும் போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
சம்பவம் நடந்த இடத்தில் பதிவாகி இருந்த, மொபைல் போன் டவரை வைத்து, போலீசார் விசாரித்தனர். இதன் அடிப்படையில் கோவாவில் இருவரை நேற்று முன்தினம், ஞானபாரதி போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் இருவரும் உல்லாலை சேர்ந்த சஞ்சய், 25, ஆனந்த், 24 ஆவர். தங்கள் நண்பர்களான திம்மா, ஹனுமந்தாவுடன் சேர்ந்து, குருசித்தப்பாவை கொன்றதை ஒப்புக்கொண்டனர். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.
ரூ.5 லட்சம் பறிப்பு
சஞ்சய், ஆனந்த், திம்மா, ஹனுமந்தா ஆகிய நால்வரும், புத்தாண்டை ஒட்டி கோவா செல்ல முடிவு செய்தனர். ஆனால் அங்கு செல்ல அவர்களிடம் பணம் இல்லை. இதனால் யாரையாவது கடத்தி, பணம் பறிக்க திட்டமிட்டனர்.
சஞ்சய்க்கு, தனக்கு பழக்கமான, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை டீலர் குருசித்தப்பா நினைவு வந்தது. அவரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டனர்.
அதன்படி, அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, உல்லால் ஏரிக்கரைக்கு வரவழைத்தனர். அங்கு வந்தவரை காரில் ஏற்றி, கத்தியை காட்டி மிரட்டி, 5 லட்சம் ரூபாய் கேட்டு உள்ளனர். இதனால் மனைவிக்கு போன் செய்து பணம் எடுத்து வரும்படி கூறியுள்ளார். இதுகுறித்து மனைவியிடம் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளனர்.
பணத்தை வாங்கிக் கொண்டு மனைவியை, குருசித்தப்பா அனுப்பி வைத்த பின்னர், 'பணம் கிடைத்து விட்டதால் எதுவும் செய்ய மாட்டோம். மது விருந்துக்கு வா' என்று குருசித்தப்பாவை அழைத்து உள்ளனர். அதன்படி குருசித்தப்பாவும், மது விருந்துக்கு சென்றார்.
ஆடம்பர செலவு
மஞ்சினபெலே அணையை ஒட்டிய வனப்பகுதியில், அனைவரும் மது அருந்தினர். கடத்தி பணம் பறித்தது தொடர்பாக, போலீசில் புகார் அளித்து, தங்களை, குருசித்தப்பா சிக்கவைத்து விடுவார் என்று கருதி, நான்கு பேரும் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.
பின், கோவாவிற்கு தப்பி சென்று, புத்தாண்டை கொண்டாடியதுடன், அங்கு ஆடம்பரமாக செலவு செய்ததும் விசாரணையில் தெரியவந்து உள்ளது. தலைமறைவாக உள்ள திம்மா, ஹனுமந்தாவை போலீசார் தேடுகின்றனர்.