Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/காங்., தோல்வி அடைந்தால் சித்தராமையா பதவி... பறிபோகுமா? பீதியுடன் காத்திருக்கும் முதல்வரின் ஆதரவாளர்கள்

காங்., தோல்வி அடைந்தால் சித்தராமையா பதவி... பறிபோகுமா? பீதியுடன் காத்திருக்கும் முதல்வரின் ஆதரவாளர்கள்

காங்., தோல்வி அடைந்தால் சித்தராமையா பதவி... பறிபோகுமா? பீதியுடன் காத்திருக்கும் முதல்வரின் ஆதரவாளர்கள்

காங்., தோல்வி அடைந்தால் சித்தராமையா பதவி... பறிபோகுமா? பீதியுடன் காத்திருக்கும் முதல்வரின் ஆதரவாளர்கள்

ADDED : ஜூன் 04, 2024 04:56 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு : லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கும் சூழலில், கர்நாடகாவில் காங்கிரஸ் தோற்றால், சித்தராமையாவின் முதல்வர் பதவி பறிக்கப்படுமா என, அவரது ஆதரவாளர்கள் பீதியில் காத்திருக்கின்றனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு நடக்கிறது. சட்டசபை தேர்தல் முடிந்த அடுத்த ஆண்டே, லோக்சபா தேர்தலை எதிர்கொண்டது. இது முதல்வர் சித்தராமையாவுக்கு அக்னி பரீட்சையாக இருந்தது. இதில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

கடந்த 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த போது, முதல்வர் பதவிக்காக சித்தராமையா, சிவகுமார் இடையே மோதல் ஏற்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் பலரும், சித்தராமையாவுக்கு ஆதரவாக நின்றனர்.

சிலர் சிவகுமார் முதல்வராக வேண்டும் என்றனர். சிவகுமாரும், சித்தராமையாவும் டில்லி, பெங்களூரு இடையே அலைபாய்ந்தனர்.

பல சுற்று கூட்டங்கள் நடந்த பின், சித்தராமையா இரண்டாவது முறையாக முதல்வரானார். தன்னை முதல்வராக்கினால் லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் கட்சியை அதிக தொகுதிகளில் வெற்றி பெற வைப்பதாக உறுதி அளித்திருந்தார்.

இதையேற்ற மேலிடம், இவரை முதல்வராக்கியது. முதல்வர் பதவி எதிர்பார்த்த சிவகுமாருக்கு, துணை முதல்வர் பதவியுடன், கூடுதலாக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் நீட்டிக்க அனுமதி கிடைத்தது.

அமைச்சரவையிலும், சித்தராமையா கை காண்பித்தவர்களுக்கு இடம் கிடைத்தது. அமைச்சர்கள் ராஜண்ணா, சதீஷ் ஜார்கிஹோளி, ஜமீர் அகமது கான், எம்.பி.பாட்டீல், மல்லிகார்ஜுன் என, பலரும் சித்தராமையா ஆதரவாளர்கள் தான்.

முதல்வரான பின், லோக்சபா தேர்தலை குறி வைத்து செயல்பட்டார். சட்டசபை தேர்தலுக்கு முன், காங்கிரஸ் அறிவித்த ஐந்து வாக்குறுதி திட்டங்களை கட்டம், கட்டமாக செயல்படுத்தினார்.

இதனால் அவரது இமேஜ் அதிகரித்தது. லோக்சபா தேர்தலில் சீட் கொடுப்பதிலும், சித்தராமையாவின் கை ஓங்கியது. இவர் கூறியவர்களுக்கே சீட் கிடைத்தது. குறிப்பாக அமைச்சர்களின் வாரிசுகளுக்கு சீட் கிடைக்க செய்தார். இவர்களை வெற்றி பெற வைக்கும்படி, அமைச்சர்களுக்கு கட்டளையிட்டிருந்தார். முதல்வரும் தொகுதி, தொகுதியாக சுற்றி வந்து பிரசாரம் செய்தார். ரோடு ஷோ, பொதுக்கூட்டங்கள் நடத்தியிருந்தார்.

சட்டசபை தேர்தலை போன்று, லோக்சபா தேர்தலிலும் வாக்குறுதி திட்டங்கள் கை கொடுக்கும் என, சித்தராமையா நம்பினார். பிரசாரத்திலும் இதையே அஸ்திரமாக பயன்படுத்தினார்.

கட்சி வெற்றி பெறும் என, சித்தராமையா மட்டுமின்றி காங்., மேலிடமும் நம்பியுள்ளது. ஆனால் இந்த நம்பிக்கையில், கருத்து கணிப்புகள் மண்ணை போட்டுள்ளன.

அனைத்து அமைப்புகளின் கணிப்புமே, பா.ஜ., வெற்றி பெறும் என, கூறுகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28ல் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கட்சி வெற்றி பெறும் என, கூறியுள்ளதால் சித்தராமையா ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். கர்நாடகாவில் ஆளுங்கட்சியாக இருந்தும், காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறா விட்டால், கட்சிக்கு பேரிடியாக இருக்கும்.

சித்தராமையாவின் முதல்வர் நாற்காலியும் ஆட்டம் காணும். இவர் பதவியில் நீடித்தால் தான், அவரது ஆதரவு அமைச்சர்கள் பதவியில் இருக்க முடியும். கட்சிக்கு அதிக தொகுதிகள் கிடைக்காவிட்டால், மாநிலத்தில் முதல்வர் மாற்றம் நடக்கும் என, வேட்பாளர்களே பகிரங்கமாக கூறினர்.

இப்போது வெளியான கருத்து கணிப்பு உண்மையானால், முதல்வர் மாற்றம் நிச்சயம் என, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.முதல்வரின் ஆதரவாளர்கள் கவலையில் உள்ளனர். காங்கிரஸ் தோற்றாலும், சித்தராமையாவை முதல்வர் பதவியில் தக்க வைக்க, என்ன செய்வது என, ஆலோசிக்கின்றனர்.மற்றொரு பக்கம் காங்கிரசில் உள்ள, சித்தராமையாவின் எதிரி கோஷ்டி, உள்ளுக்குள் கும்மாளம் போடுகிறது.

இவரை முதல்வர் பதவியில் இருந்து கீழே இறக்கும் நாளை, ஆவலோடு எதிர்பார்க்கிறது. லோக்சபா தேர்தல் முடிவு வெளியான பின், கர்நாடக அரசியலில் பல அதிரடி திருப்பங்கள் நடக்கும் என்பது மட்டும் உறுதி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us