போதை பொருள் வழக்கு நடிகை ஹேமா கைது
போதை பொருள் வழக்கு நடிகை ஹேமா கைது
போதை பொருள் வழக்கு நடிகை ஹேமா கைது
ADDED : ஜூன் 04, 2024 04:52 AM

பெங்களூரு : 'ரேவ் பார்ட்டி'யில் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில், தெலுங்கு நடிகை ஹேமா கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு ஹெப்பகோடியில் உள்ள பண்ணை வீட்டில், கடந்த மாதம் 19ம் தேதி ரேவ் பார்ட்டி நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் போதை பொருள் பயன்படுத்துவதாக, சி.சி.பி., போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார், விருந்தில் பங்கேற்ற, தெலுங்கு நடிகை ஹேமா, 57, ஆஷி ராய், 25 உட்பட 103 பேரிடம் விசாரித்தனர்.
இவர்களின் ரத்தம், தலை முடி மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஹேமா, ஆஷி ராய் உட்பட 86 பேர் போதை பொருள் பயன்படுத்தியது தெரிந்தது.
இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக ஹேமா உட்பட எட்டு பேருக்கு, சி.சி.பி., போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் ஹேமா விசாரணைக்கு ஆஜராகவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவருக்கு இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால், கைது செய்யப்படுவீர்கள் என்றும் கூறப்பட்டு இருந்தது.
அழுத்தம்
இதற்கிடையில் ஹேமாவை கைது செய்ய கூடாது என்று, ஆந்திர அரசியல்வாதிகளிடம் இருந்து, சி.சி.பி., போலீசாருக்கு அழுத்தம் வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை 4:00 மணிக்கு, பெங்களூரு சாம்ராஜ்பேட்டில் உள்ள, சி.சி.பி., அலுவலகத்திற்கு வந்த பர்தா அணிந்து ஹேமா வந்தார். விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜரானார்.
பரிசோதனை
ரேவ் பார்ட்டி, போதை பொருள் பயன்படுத்தியது குறித்து, விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவரிடம் இருந்து, சரியான பதில் இல்லை. இதனால் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் மல்லேஸ்வரத்தில் உள்ள கே.சி.,ஜெனரல் அரசு மருத்துவமனையில், ஹேமாவுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இன்று காலை, ஆனேக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
ரேவ் பார்ட்டிக்கு, பெங்களூரு டி.ஜே.ஹள்ளியின் இமார் ஷெரீப், 35 என்பவர், போதை பொருள் வினியோகம் செய்தது தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு, அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 40 எம்.டி.எம்.ஏ., மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.