ரகுபதி பட்டுக்கு ' சீட் ' மறுப்பு: மேலிடம் மீது பிரதாப் அதிருப்தி
ரகுபதி பட்டுக்கு ' சீட் ' மறுப்பு: மேலிடம் மீது பிரதாப் அதிருப்தி
ரகுபதி பட்டுக்கு ' சீட் ' மறுப்பு: மேலிடம் மீது பிரதாப் அதிருப்தி
ADDED : ஜூன் 04, 2024 04:58 AM

மைசூரு : மேலவை தேர்தலில், ரகுபதி பட்டுக்கு சீட் கை நழுவியதால், பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா, கட்சி மேலிடத்தின் மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மேலவையின் தென்மேற்கு பட்டதாரிகள் தொகுதியில், ரகுபதி பட் பா.ஜ.,வில் சீட் எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால் மனம் வருந்திய இவர், கட்சிக்கு போட்டியாக சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக நோட்டீஸ் அனுப்பிய, பா.ஜ., ஒழுங்கு கமிட்டி, கட்சி வேட்பாளருக்கு எதிராக போட்டியிட வேண்டாம் என எச்சரித்தது. இதை பொருட்படுத்தாததால், கட்சியில் இருந்து ரகுபதி பட் நீக்கப்பட்டார்.
இதற்கிடையில், உடுப்பி கல்லுாரியில் படித்த ஆலியா என்ற மாணவி சீருடை விதிகளை மீறி, ஹிஜாப் அணிந்து வந்தார். இதை எதிர்த்து ரகுபதி பட் உட்பட பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இவரை, ஆலியா கிண்டல் செய்துள்ளார்.
ரகுபதி பட்டுக்கு சீட் கொடுக்காததுடன், அவரை கட்சியில் இருந்தும் நீக்கியதால் எம்.பி., பிரதாப் சிம்ஹா, பா.ஜ., மேலிடத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளார்.
இதுதொடர்பாக, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் நேற்றைய அவரின் பதிவு:
உடுப்பியின் கல்வி நிறுவனம் ஒன்றில், சீருடை விதிகளை மீறி, ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்தவர்களுக்கு எதிராக போராடிய ரகுபதி பட்டுக்கு, எம்.எல்.சி., சீட் கிடைக்கவில்லை. இது போதாது என்பதை போன்று, பா.ஜ.,வில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். ஹிஜாப் மாணவியின் கேலிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது, துரதிர்ஷ்டம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.