நான் அரசியலுக்கு செல்ல மாட்டேன் இதய வல்லுனர் மஞ்சுநாத் திட்டவட்டம்
நான் அரசியலுக்கு செல்ல மாட்டேன் இதய வல்லுனர் மஞ்சுநாத் திட்டவட்டம்
நான் அரசியலுக்கு செல்ல மாட்டேன் இதய வல்லுனர் மஞ்சுநாத் திட்டவட்டம்
ADDED : ஜன 25, 2024 05:45 AM

பெங்களூரு : ''நான் அரசியலுக்கு வரமாட்டேன். டாக்டராக பணியைத் தொடர்வேன்,'' என, ஜெயதேவா இதயநோய் மருத்துவமனை இயக்குனர் மஞ்சுநாத் தெரிவித்தார்.
பெங்களூரின், ஜெயதேவா இதயநோய் மருத்துவமனை இயக்குனராக பணியாற்றுபவர் டாக்டர் மஞ்சுநாத். இவரது பணித்திறன் காரணமாக, இவரது பதவிக்காலம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட பதவிக் காலம் ஜனவரி 31ல் முடிவடைகிறது.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், மஞ்சுநாத் அரசியலுக்கு வருவார் என, தகவல் வெளியானது. இதை அவர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து, பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
என் பதவிக் காலத்தை நீட்டிப்பதும், விடுவதும் அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயமாகும். நெருக்கடி கொடுத்து பணியில் அமரும் பழக்கம், என்னிடம் இல்லை. நான் அரசியலுக்கு செல்லமாட்டேன். என் தொழிலை தொடரவே விரும்புகிறேன்.
கருத்து கேட்கவில்லை
இது பற்றி அரசு என்னிடம் கருத்து கேட்கவில்லை. அரசு ஏற்கனவே புதிய இயக்குனரை முடிவு செய்துள்ளது.
அரசின் முடிவுபடி, என் பொறுப்பு முடிகிறது. 16 ஆண்டுகளாக ஜெயதேவா இதய மருத்துவமனை இயக்குனராக பணியாற்றுகிறேன்.
என் பதவிக் காலத்தில், மருத்துவமனையில் 500 சதவீதம் வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன. 300 படுக்கை கொண்ட மருத்துவமனை, தற்போது 2,000 படுக்கைகள் வசதி கொண்ட மருத்துவமனையாக வளர்ந்துள்ளது.
தென் ஆசியாவில், மிக பெரிய இதயநோய் மருத்துவமனை நம்முடையதாகும். ஐந்து நட்சத்திர தனியார் மருத்துவமனை போன்று ஆக வேண்டும் என, கனவு கண்டேன். அது நிறைவேறிவிட்டது. இதுவரை எட்டு லட்சம் அறுவை சிகிச்சைகள் செய்துள்ளோம்.
மைசூரில் 2010ல், ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை கட்டப்பட்டது.
பெங்களூரின் மத்திய பகுதியான மல்லேஸ்வரத்தில், சாட்டிலைட் சென்டர் திறந்துள்ளோம். இ.எஸ்.ஐ., மருத்துவமனையிலும், கிளை திறந்துள்ளோம்.
கல்யாண கர்நாடகாவில், 2016ம் ஆண்டில் 135 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை கட்டுகிறோம். 85 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. ஏப்ரலில் மருத்துவமனை திறக்கப்படும். மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்கும்.
சிகிச்சை அவசியமாக இருந்தும், பணமில்லாமல் யாரும் சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படக் கூடாது என்பதால், 'ட்ரீட்மென்ட் பஸ்ட்' என்ற திட்டத்தை கொண்டு வந்தேன். 2022 ஆய்வில் டாப் 5 மருத்துவமனைகளின் பட்டியலில், முதலிடத்தில் இருந்தது.
அங்கீகாரம்
மருத்துவமனைக்கு வி.ஐ.பி.,க்கள் என்றால், அது ஏழை நோயாளிகள். 125 இதய வல்லுனர்கள் உள்ளனர். இந்தியாவில் எங்கும், இவ்வளவு இதய வல்லுனர்கள் இல்லை. உலக வரைபடத்தில் ஜெயதேவா மருத்துவமனைக்கு, அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.