ஜி.எஸ்.டி., வருவாய் தரவுகள் வெளியிடுவதை நிறுத்தியதா அரசு?
ஜி.எஸ்.டி., வருவாய் தரவுகள் வெளியிடுவதை நிறுத்தியதா அரசு?
ஜி.எஸ்.டி., வருவாய் தரவுகள் வெளியிடுவதை நிறுத்தியதா அரசு?
ADDED : ஜூலை 03, 2024 07:02 AM

புதுடில்லி: மத்திய நிதியமைச்சகம், மாதாந்திர ஜி.எஸ்.டி., வருவாய் குறித்த தரவுகளை வெளியிடுவதை நிறுத்தியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம், ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே, மத்திய நிதியமைச்சகம், ஒவ்வொரு மாத ஜி.எஸ்.டி., வருவாய் குறித்த தரவுகளை அடுத்த மாத முதல் தேதியில் வெளியிடும்.
இதன் அடிப்படையில், கடந்த ஜூன் மாத ஜி.எஸ்.டி., வருவாய் குறித்த தரவுகள் நேற்று முன்தினமே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அமைச்சகத்திடமிருந்து இதுதொடர்பாக எந்தவொரு தகவலும் இல்லை.
மாறாக, ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தி ஏழு ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, அதன் சமூக வலைதள பக்கங்களில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டது.
இதையடுத்து, ஜி.எஸ்.டி., வருவாய் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளிவராத நிலையில், கடந்த மாதம் ஜி.எஸ்.டி., வருவாய் 1.74 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.
கடந்தாண்டு ஜூன் மாத ஜி.எஸ்.டி., வருவாயான 1.61 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஜூன் மாத ஜி.எஸ்.டி., வருவாய் 7.74 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவே மிகக் குறைந்த ஜி.எஸ்.டி., வருவாய் வளர்ச்சி விகிதமாகும்.
இந்நிலையில், ஜி.எஸ்.டி., வருவாய் தொடர்பாக, அரசு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அரசின் தரவுகள் இல்லாதபட்சத்தில், நாட்டின் பொருளாதார நிலை மற்றும் செயல்பாடுகள் குறித்த தெளிவான பார்வை கிடைக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.