பேபி மலையில் இன்று வெடி வைத்து பாறை தகர்ப்பு
பேபி மலையில் இன்று வெடி வைத்து பாறை தகர்ப்பு
பேபி மலையில் இன்று வெடி வைத்து பாறை தகர்ப்பு
ADDED : ஜூலை 03, 2024 05:24 AM

மாண்டியா : பேபி மலையில் இன்று சோதனை அடிப்படையில், பாறைகளை தகர்க்க வெடி வைக்கப்படுகிறது. இதனால் கே.ஆர்.எஸ் அணைக்கு பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, கே.ஆர்.எஸ்., அணை உள்ளது. இந்த அணையை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வந்தன. கல்குவாரிகளில் பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடிகளால், அணைக்கு பாதிப்பு ஏற்படுவதாக மாண்டியா முன்னாள்எம்.பி., சுமலதா குற்றம் சாட்டினார்.
அணையின் பாதுகாப்பை கருதி கடந்த 2021ல், அணையை சுற்றி 20 கி.மீ.,க்கு கல்குவாரிகள் செயல்பட தடை விதித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.இதை எதிர்த்து 2022ல் 17 கல்குவாரிகளின் உரிமையாளர்கள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றமும், அணையை சுற்றி 20 கி.மீ.,க்கு சுரங்க பணிகள் நடப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், சோதனை அடிப்படையில் கல்குவாரிகளில் வெடி வைத்து பாறைகளைத் தகர்க்க அரசு அனுமதி வழங்கியதாக, மாண்டியா மாவட்ட நிர்வாகம் கூறியது.
ஆனால், இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில் பாறைகளை தகர்க்க அரசு அனுமதி வழங்கவில்லை என்பது தெரிந்தது.ஆனாலும் கல்குவாரி அதிபர்கள் சிலர், கல்குவாரிகளை மீண்டும் செயல்பட அனுமதிக்கும்படி மாண்டியா மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், அணையின் அருகே உள்ள பேபி மலை கல்குவாரியில், சோதனை அடிப்படையில் பாறைகளை தகர்க்க வெடி வைப்பதற்கு கர்நாடக அரசு அனுமதித்துள்ளது.
இதையடுத்து இன்று பேபி மலையில், சோதனை அடிப்படையில் பாறைகளை தகர்க்க வெடி வைக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடும் கோபம் அடைந்துள்ளனர். 'கல்குவாரிகள் மீண்டும் செயல்பட துவங்கினால், அணைக்கு தான் பாதிப்பு' என ஆதங்கம்தெரிவித்துள்ளனர்.