Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அதானி விவகாரம்: கோட்டக், செபி மீது பாய்ந்த ஹிண்டன்பர்க்

அதானி விவகாரம்: கோட்டக், செபி மீது பாய்ந்த ஹிண்டன்பர்க்

அதானி விவகாரம்: கோட்டக், செபி மீது பாய்ந்த ஹிண்டன்பர்க்

அதானி விவகாரம்: கோட்டக், செபி மீது பாய்ந்த ஹிண்டன்பர்க்

ADDED : ஜூலை 03, 2024 07:06 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: 'அதானி' குழுமத்தின் மீது, பங்குச் சந்தை முறைகேடு குறித்து அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு, 'செபி' அண்மையில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதற்கு பதிலளித்துள்ள ஹிண்டன்பர்க், 'கோட்டக் மஹிந்திரா' வங்கி மீதும் அதன் தலைவர் உதய் கோட்டக் மீதும் குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் செபி மீதும் கேள்வி எழுப்பி உள்ளது.

செபியின் குற்றச்சாட்டு


'கிங்டன் கேப்பிடல் மேனேஜ்மென்ட்' எனும் நிறுவனமும், ஹிண்டன்பர்க் நிறுவனமும் இணைந்து, அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலையில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தி, லாபத்தை பகிர்ந்து கொண்டுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.

மேலும், இதற்காக கிங்டன் நிறுவனம், கே.ஐ.ஓ.எப்., எனும் பண்டு திட்டத்தை பயன்படுத்தி, 8.50 லட்சம் அதானி குழும பங்குகளில், முன்பேர வர்த்தகம் வாயிலாக, முதலீடு மேற்கொண்டு 183.24 கோடி ரூபாய் ஈட்டியதாக குற்றம் சாட்டியுள்ளது.

ஹிண்டன்பர்கின் பதில்


அதானி குழுமத்தின் மீதான எங்களுடைய முதலீடு முயற்சி அனைவரும் அறிந்ததே. மேலும், கிங்டன் உடன் இணைந்து நாங்கள் ஈட்டிய லாபம், வெறும் 34 கோடி ரூபாய் மட்டுமே. இதிலும் அதானி குழுமம் தொடர்பான ஆராய்ச்சிக்கான செலவு போக, எங்களுக்கு கிடைத்த லாபம், மிகக் குறைவு.

செபி அனுப்பியுள்ள நோட்டீசில், 'கோட்டக் மஹிந்திரா இன்வெஸ்ட்மென்ட்ஸ்' நிறுவனத்தின் பெயரை, கே.எம்.ஐ.எல்., என சுருக்கி மறைத்துள்ளது. லாபம் ஈட்டியதற்காக கிங்டன் கேப்பிடல் பயன்படுத்திய கே.ஐ.ஓ.எப்., எனும் பண்டு திட்டம், கே.எம்.ஐ.எல்., நிறுவனத்தின் வெளிநாட்டு பண்டு திட்டமாகும்.

இந்த பண்டு திட்டத்தை துவங்கியதில் கோட்டக் வங்கிக்கும், கோட்டக்கின் பங்கு தரகு நிறுவனங்களுக்கும் பங்கு உள்ளது. கோட்டக் வங்கியின் தலைவர் உதய் கோட்டக், கடந்த 2017ம் ஆண்டு, செபி அமைத்த 'கார்ப்பரேட் கவர்னன்ஸ்' குழுவுக்கு தலைவராக இருந்தார்.

இந்நிலையில், கோட்டக் வங்கி குறித்தும், அது தொடர்புடையவர்கள் குறித்தும் செபி குறிப்பிட மறுப்பது, இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு சக்திவாய்ந்த நபரை, செபி காப்பாற்ற நினைப்பது போலத் தோன்றுகிறது. அதானி குழுமம் குறித்த எங்களது ஆராய்ச்சி, இன்றளவில் எங்களின் சிறந்த பணியாகும். இதை லாபம் ஈட்டும் நோக்கில் மட்டும் நாங்கள் மேற்கொள்ளவில்லை.

கோட்டக் மறுப்பு


இந்நிலையில் ஹிண்டன்பர்க் தங்களுடைய வாடிக்கையாளரே இல்லை என்று, கோட்டக் தெரிவித்துள்ளது. மேலும் ஹிண்டன்பர்க் குறிப்பிட்டுள்ள பண்டு திட்டம், செபியில் பதிவு செய்யப்பட்ட திட்டம் என்று தெரிவித்துள்ள கோட்டக், இத்திட்டத்தில் முதலீட்டாளர்களை இணைக்கும் போது, முறையான கே.ஒய்.சி., விதிகள் பின்பற்றப்படுவதாக கூறியுள்ளது.

மேலும், இதில் முதலீடு செய்துள்ளவர்களுக்கும், ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கும் தொடர்பிருந்தது பற்றி தங்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளது. மொத்தத்தில், அதானி -- ஹிண்டன்பர்க் விவகாரம், புலி வாலை பிடித்த கதையாக, பிரச்னை தீராமல், புதிய புதிய குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us