எனக்கு நான் தான் மேலிடம் அமைச்சர் ராஜண்ணா அதிரடி
எனக்கு நான் தான் மேலிடம் அமைச்சர் ராஜண்ணா அதிரடி
எனக்கு நான் தான் மேலிடம் அமைச்சர் ராஜண்ணா அதிரடி
ADDED : பிப் 12, 2024 06:31 AM

ஆட்சியில், மூன்று துணை முதல்வர்கள் நியமிக்கும்படி வலியுறுத்தி, கட்சி மேலிடத்தின் கோபத்துக்கு ஆளான, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா, தற்போது மேலிடத்துக்கு நேரடியாக சவால் விடும் வகையில் பேசியுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் அரசில் முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில், ராஜண்ணா கூட்டுறவு துறை அமைச்சராக பணியாற்றுகிறார். சமீப நாட்களாக இவருக்கும், மாநில தலைமைக்கும் 'பனிப்போர்' நடந்து வருகிறது. இவர், முதல்வர் சித்தராமையா கோஷ்டியில், அடையாளம் காணப்படுபவர்.
நெருக்கடி
சமீப நாட்களாக மூன்று துணை முதல்வர்களை நியமித்து, மற்ற சமுதாயத்தினருக்கு வாய்ப்பளிக்கும்படி, காங்கிரஸ் மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். விரைவில் டில்லிக்கு குழுவை அழைத்து செல்வதாகவும் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மாநில காங்., தலைவருமான, துணை முதல்வருமான சிவகுமார் கடுப்படைந்தார். நிகழ்ச்சி ஒன்றில் பகிரங்கமாகவே, அமைச்சர் ராஜண்ணாவை கண்டித்தார்.
மூன்று துணை முதல்வர்கள் பிரச்னை, விஸ்வரூபம் எடுப்பதை உணர்ந்த கட்சி மேலிடம், மாநில பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா மூலமாக, ராஜண்ணா 'வாய்க்கு பூட்டு' போட்டது. ஆனால் அவர் அவ்வப்போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை நிறுத்தவில்லை. மேலிடத்துக்கு சவால் விடும்படி பேசுகிறார். லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், காங்., மேலிடத்துக்கு பெரும் தலைவலியாக மாறுகிறார்.
ஹாசனில் நேற்று அமைச்சர் ராஜண்ணா கூறியதாவது:
எனக்கு நானே கட்சி மேலிடம்; எனக்கு யாரும் மேலிடம் இல்லை. என்னை பொறுத்த வரை தொகுதி வாக்காளர்கள்தான் மேலிடம். எனக்கு மாநில தலைவர், தேசிய தலைவர் உள்ளனர். அவர்களுக்கு அளிக்க வேண்டிய கவுரவத்தை அளிக்கிறேன். இவர்களின் பேச்சை மறுக்க மாட்டேன்.
அவசியம் இல்லை
மாநில தலைவர் போன்று, நான் ஆடுவதாக சிலர் விமர்சிக்கின்றனர். என் நடத்தை, மக்கள் பாராட்டும்படி இருக்க வேண்டும். யாரையோ கவரும் வகையில், நான் நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
கட்சி மேலிடத்துக்கு பயப்படுவோர் குறித்து, நான் என்ன சொல்ல முடியும்.
நான் யாருக்கு பயப்பட வேண்டுமோ, அவர்களுக்கு பயப்படுவேன். கட்சிக்கு கட்டுப்படுவேன். அது என் கடமை. ஆனால் நான் யாருக்கும் அடிமை அல்ல.
அரசியலில் யாரும் சன்னியாசிகள் அல்ல. அரசியல் என்பது ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் அல்ல. பாய்ந்தோடுவது.
தேர்தல் நேரத்தில் கட்சி தாவல் சகஜம். எது பற்றியும் இப்போதே முடிவு செய்ய முடியாது.
இவ்வாறு அவர்கூறினார்
.- நமது நிருபர் -