Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கினார் சசிகலா; பண மதிப்பிழப்பு காலத்தில் வாங்கியதாக சிபிஐ எப்ஐஆர் பதிவு

ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கினார் சசிகலா; பண மதிப்பிழப்பு காலத்தில் வாங்கியதாக சிபிஐ எப்ஐஆர் பதிவு

ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கினார் சசிகலா; பண மதிப்பிழப்பு காலத்தில் வாங்கியதாக சிபிஐ எப்ஐஆர் பதிவு

ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கினார் சசிகலா; பண மதிப்பிழப்பு காலத்தில் வாங்கியதாக சிபிஐ எப்ஐஆர் பதிவு

ADDED : செப் 06, 2025 02:52 PM


Google News
Latest Tamil News
சென்னை: நாட்டில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது, 450 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கொடுத்து சசிகலா சர்க்கரை ஆலையை வாங்கியிருப்பது, சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.

மத்திய அரசு, 2016ம் ஆண்டு நவ.,8ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. அதன்படி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. கறுப்புப்பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறு பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட சில வாரங்களில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, 450 கோடி ரூபாய்க்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்மாதேவி சுகர்ஸ் என்ற சர்க்கரை ஆலையை வாங்கியுள்ளார்.

அதுவும், பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை ரொக்கமாக கொடுத்து சர்க்கரை ஆலையை விலைக்கு வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட அந்த சர்க்கரை ஆலை நிறுவன இயக்குனர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 120 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்ததாக சிபிஐயின் பெங்களூரு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில் இந்த விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருகிறது. நடப்பாண்டில் ஜூலை மாதம் வழக்கு பதிந்த சிபிஐ, ஆகஸ்டில் சென்னை, திருச்சி, தென்காசி ஆகிய இடங்களில் சோதனையையும் மேற்கொண்டது.

சிபிஐ பதிந்த முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

2017ம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட சோதனைகளின் போது சசிகலா உள்ளிட்டோரின் சொத்துகளில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அப்போது, பத்மாதேவி சுகர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் சர்க்கரை ஆலையை பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, ரொக்கமாக ரூ.450 கோடி கொடுத்து, சசிகலா வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

அந்த ஆலையின் நிதி விவகாரங்களை கவனித்து வந்த ஹிதேஷ் ஷிவ்கன் படேல், ஆலையை விற்கும்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் அவரும், அவரது தந்தை சிவகன் படேல், சகோதரர் தினேஷ் படேல் கையெழுத்திட்டுள்ளனர். இந்த விவரங்களை கண்டறிந்த வருமானவரித்துறை சர்க்கரை ஆலையை முடக்கியது. அது பினாமி சொத்து என்றும், சசிகலா தான் ஆதாய உரிமையாளர் என்றும் அறிவித்தது.

சிபிஐ பதிந்துள்ள வழக்கில், பத்மாதேவி சுகர்ஸ் நிறுவனம், அதன் இயக்குனர்கள் ஹிதேஷ் ஷிவ்கன் பட்டேல், தினேஷ் ஷிவ்கன் பட்டேல், தம்புராஜ் ராஜேந்திரன், பாண்டியராஜ், வெங்கட பெருமாள் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து மோசடியாக கடன் பெற்றுக் கொண்டது, சொத்துகளை முறைகேடாக பயன்படுத்தியது, பணத்தை மற்ற நிறுவனங்களுக்கு மாற்றியது, தனிப்பட்ட நிறுவனங்களுக்கு வட்டியில்லாத கடனாக பணத்தை வழங்கியது, பணமதிப்பிழப்பு அமலில் இருக்கும் போது, சந்தேகத்துக்குரிய வழியில் வந்த பணத்தை ரொக்கமாக வங்கிகளில் செலுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் இடம்பெற்றுள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சர்க்கரை ஆலையை முறைகேடாக வாங்கியதாக கூறப்பட்ட வழக்கு, அரசியல் ரீதியாக சசிகலாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us