உயர் ரக கார்களை திருடிய குடும்பம் சிக்கியது
உயர் ரக கார்களை திருடிய குடும்பம் சிக்கியது
உயர் ரக கார்களை திருடிய குடும்பம் சிக்கியது
ADDED : ஜூன் 14, 2025 09:03 PM
புதுடில்லி:கார் திருடும் குடும்பம் துவாரகாவில் கைது செய்யப்பட்டது. அந்தக் குடும்பத்தினர் இரண்டு மாதங்களில், 25 வாகனங்களை திருடியுள்ளனர்.
துவாரகா போலீஸ் துணைக் கமிஷனர் அங்கித் சிங் கூறியதாவது:
துவாரகாவில் வசிப்பவர் ராமன்,56, அவரது மகன் சாகர்,31, அவரது மருமகன் நீரஜ்,29. டில்லி மற்றும் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேச மாநிலங்களில் கார் திருடி வந்தனர்.
இந்தக் குடும்பம் மாருதி பிரெஸ்ஸா, ஸ்விப்ட் டிசையர், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் டொயோட்டா பார்ச்சூனர் போன்ற உயர் ரக கார்களை குறிவைத்து திருடி வந்தது. உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காக்களுக்கு அருகேதான் பெரும்பாலான கார்கள் திருடப்பட்டுள்ளன.
காரின் பாதுகாப்பு அமைப்புகளை முடக்கி, வாகனத்தின் மின்னணு அமைப்புகளை செயல்படுத்த அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தியுள்ளனர். பெரும்பாலும் ஏழு நிமிடங்களுக்குள் காரை ஸ்டார்ட் செய்துள்ளது.
மே 28ம் தேதி கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில், உத்தம் நகரில் திருடப்பட்ட காரை மடக்கிய போலீசார், ராமன் மற்றும் சாகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அந்தக் காரின் இன்ஜின் மற்றும் சேசிஸ் எண்களைச் சரிபார்த்தபோது, அந்தக் கார் கேசவ்புரம் பகுதியில் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தக் காருக்குள் ஸ்கேனர், சாவி இணைப்பு, மற்றும் ஒரு எலக்டரானிக் சாதனம், பூட்டு உடைக்கும் கருவி, கட்டர்கள், இடுக்கி, போலி சாவிகள் மற்றும் போலி நம்பர் பிளேட்டுகள் இருந்தன.
மகன் சாகர் மற்றும் மருமகன் நீரஜ் ஆகியோருடன் சேர்ந்து, 10 மாதங்களில் 25க்கும் மேற்பட்ட கார்களை திருடியதை ராமன் ஒப்புக் கொண்டார். அவர்களிடம் இருந்து இரண்டு கார்கள் மீட்கப்பட்டுள்ளன.
திருடப்பட்ட கார்களை உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு ஏஜென்டிடம் விற்றுள்ளனர். ராமன் மீது ஏற்கனவே, 18 குற்ற வழக்குகளும், சாகர் மீது, 12 வழக்குகளிலும், நீரஜ் மீது, 14 குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன. திருட்டு கார்களை மீட்க தனிப்படை போலீசார் மீரட் சென்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.