ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து தெலுங்கானாவில் 12 பேர் பரிதாப பலி
ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து தெலுங்கானாவில் 12 பேர் பரிதாப பலி
ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து தெலுங்கானாவில் 12 பேர் பரிதாப பலி
ADDED : ஜூலை 01, 2025 12:53 AM

ஹைதராபாத் : தெலுங்கானாவில், ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்; 34 பேர் படுகாயமடைந்தனர்.
தெலுங்கானாவில் சங்கரெட்டி மாவட்டத்தின் பதஞ்சேரு பகுதியில் பாஷ்மிலராம் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு, ஷிகாச்சி ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இதில், 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று பணியில் இருந்தனர். அப்போது தொழிற்சாலையில் இருந்த உலை ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
மீட்புப்பணி
இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் பதறியபடி வெளியேறினர். எனினும், உலையின் அருகே இருந்த தொழிலாளர்கள் இந்த விபத்தில் சிக்கியது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு உதவியுடன் உள்ளே இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை நீண்டநேரம் போராடி, தீயணைப்புப் படையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து, உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். அப்போது, தொழிற்சாலையில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுதவிர, படுகாயங்களுடன் 36 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில், இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். இந்த வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிவாரணம்
இந்த விபத்து, அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளதாக சமூக வலைதளத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி குறிப்பிட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு சார்பில், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம்அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரண தொகையாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.