'டிஜிட்டல் முகவரி' திட்டம்; ம.பி., இந்துாரில் அறிமுகம்
'டிஜிட்டல் முகவரி' திட்டம்; ம.பி., இந்துாரில் அறிமுகம்
'டிஜிட்டல் முகவரி' திட்டம்; ம.பி., இந்துாரில் அறிமுகம்
ADDED : ஜூலை 01, 2025 12:59 AM

இந்துார் : மத்திய பிரதேசத்தில் 'டிஜிட்டல் முகவரி' திட்டத்தை சோதனை முயற்சியாக இந்துார் மாநகராட்சி நிர்வாகம் நடைமுறைப்படுத்தி உள்ளது.
நம் நாட்டின் தபால் துறை சார்பில், 'டிஜிபின்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு இலக்க 'பின்கோடு'க்கு மாற்றாக இந்த எண் பயன்படுத்தப்பட உள்ளது. 'கூகுள் மேப்' உதவியுடன் நம் வீட்டின் முகவரியை எளிதில் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக, 10 இலக்க எண் ஒதுக்கப்படும்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்துார் நகரில், டிஜிட்டல் முகவரி என்ற திட்டத்தை சோதனை முயற்சியாக மாநகராட்சி நிர்வாகம் நடைமுறைப்படுத்தி உள்ளது. இதற்காக, ஒவ்வொரு வீட்டின் முன் பிரத்யேக 'க்யூ.ஆர்., கோடு' வடிவில், 'டிஜிட்டல் பிளேட்' பொருத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக, இந்துார் மாநகராட்சியின் 82வது வார்டான சுதாமா நகர் பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'ஸ்மார்ட்' நிர்வாக திட்டத்தின் ஒரு பகுதியாக, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் முகவரி முறையை அறிமுகப்படுத்தி உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்துார் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மத்திய அரசின் டிஜிபின் திட்டத்துடன், எங்களின் டிஜிட்டல் முகவரி திட்டத்தை இணைத்துள்ளோம். இதற்காக, ஒவ்வொரு வீட்டின் முன் வைக்கப்படும் டிஜிட்டல் பிளேட் வாயிலாக, வீட்டின் உரிமையாளர்கள் சொத்து வரி உள்ளிட்டவற்றை எளிதில் செலுத்தவும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதேபோல் புகார்களை தெரிவிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேம்படுத்தும் விதமாக மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்' என தெரிவித்தனர்.