தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா?: வைரலாகும் வீடியோ
தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா?: வைரலாகும் வீடியோ
தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா?: வைரலாகும் வீடியோ
ADDED : ஜூன் 12, 2024 12:10 PM

விஜயவாடா: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தமிழிசையிடம், மத்திய அமைச்சர் அமித்ஷா சீரியஸாக பேசும் வீடியோ வைரலாகியுள்ளது. உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதால் பா.ஜ.,வில் ஏற்பட்ட சலசலப்பு தொடர்பாக தமிழிசையை அமித்ஷா கண்டித்ததாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் அதிமுக.,வுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு, பா.ஜ., தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியிலும் தோல்வியடைந்தாலும், சில தொகுதிகளில் அதிமுக.,வை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்திருந்தது. இதனை வரவேற்ற தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரித்ததாகவும், அதிமுக.,வை விட பா.ஜ., நல்ல நிலையில் இருப்பதாகவும் பேசியிருந்தார்.
அதேநேரத்தில், தேர்தலில் போட்டியிடுவதற்காக புதுச்சேரி கவர்னர் பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன், 'அதிமுக.,வுடன் போட்டியிட்டிருந்தால் அதிக இடங்களில் வென்றிருக்கலாம். நாங்கள் ஒரு வியூகம் அமைத்திருந்தோம். கூட்டணி வைப்பதால் மோசம் போய்விட மாட்டோம். ஆனால், அண்ணாமலைக்கு எங்கள் வியூகத்தில் விருப்பம் இல்லை' என அண்ணாமலையை விமர்சித்திருந்தார். ஒரே கட்சியை சேர்ந்த இரு முக்கிய தலைவர்கள் மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டதால் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, அமித்ஷா, தமிழிசை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது அமித்ஷாவை சந்தித்து, வணக்கம் கூறினார். உடனே தமிழிசையை அருகில் அழைத்த அமித்ஷா, அவரிடம் ஏதோ சீரியஸாக பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதால் பா.ஜ.,வில் ஏற்பட்ட சலசலப்பு தொடர்பாக தமிழிசையை அமித்ஷா கண்டித்ததாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.