ADDED : பிப் 24, 2024 11:07 PM

கொரோனா தொற்று, எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதோ, அதே அளவுக்கு வாழ்க்கை பாடத்தையும் கற்றுக்கொடுத்தது. பெண்களை கொரோனா தொழிலதிபர்களாக மாற்றியுள்ளது.
கடந்த 2020, 2021, 2022ல் கொரோனா தொற்று, உலகத்தையே ஆட்டிப் படைத்தது. இந்தியா மட்டுமல்ல, மொத்த உலகத்தையும் தலைகீழாக புரட்டிப் போட்டது. பல மாதங்கள் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் உட்பட, அனைத்தும் மாதக்கணக்கில் மூடப்பட்டன.
தொழில் நடக்காமல் மூடப்பட்டிருந்ததால் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் ஆட்குறைப்பு செய்யப்பட்டது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள், ஊழியர்கள் வேலையை இழந்தனர். லட்சக்கணக்கான ரூபாய் ஊதியம் பெற்றவர்கள், காய்கறி விற்கவும், தினக்கூலி வேலைக்கும் சென்றனர். 100 நாட்கள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ஏரிகள் சீரமைப்பு, சாலை அமைப்பது, தார் பூசுவது போன்ற பணிகளுக்குச் சென்றனர்.
கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு கொஞ்சம், நஞ்சமல்ல. இப்போது அனைத்தும் இயல்பு நிலைக்கு வந்துள்ளது என்றாலும், அனுபவித்த கஷ்டங்களை, பிரச்னைகளை யாரும் மறக்கவில்லை.
தொற்று தீவிரமாக இருந்த நாட்களில், வேலை கிடைக்காமல் பலர் அவதிப்பட்டனர். உணவுக்கும் வழியில்லை. இத்தகைய சூழ்நிலையிலும் கஜேந்திரகடாவின் பெண்கள், சுய தொழில் செய்து யாரிடமும் உதவி கேட்காமல், வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர்.
'சஞ்சீவினி' திட்டம்
கதக், கஜேந்திரகடாவில் வசிக்கும் பெண்கள், கொரோனா நேரத்தில் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டனர். அப்போதுதான் இவர்களுக்கு, 'சஞ்சீவினி' திட்டம் தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்தனர். திட்டத்தின் கீழ் கடன் பெற்ற பெண்கள், ரொட்டி தயாரிக்கும் தொழிலை துவக்கினர்.
மாவு பிசையும் இயந்திரங்களை வாங்கி, ரொட்டிகள் தயாரித்து விற்றனர். குடிசை தொழில் போன்று, சிறிய அளவில் துவங்கிய ரொட்டி தொழில், இப்போது பெரிய அளவில் வளர்ந்துள்ளது.
நுாற்றுக்கணக்கான பெண்கள், குழுவை அமைத்துக்கொண்டு ரொட்டி தயாரித்து, நகரங்களுக்கு கொண்டு சென்று விற்கின்றனர். முதலில் பெண்கள் பலரும், இந்த தொழிலில் நுழைய தயங்கினர். வரவேற்பு இருக்கவில்லை.
விழிப்புணர்வு
தினமும் வீடுகளில் ரொட்டிகளை, தாங்களே தயாரிப்பதால் வெளியே வாங்கமாட்டார்கள். லாபம் கிடைக்காது என, நினைத்தனர். இவர்களுக்கு மாவட்ட மற்றும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ரொட்டி தயாரிக்கும் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் வாங்கும்படி ஊக்கப்படுத்தும்படி, ஆலோசனை கூறினர்.
அதன்படி சில பெண்கள் இயந்திரங்கள் வாங்கி, தொழில் துவங்கினர். இதற்கு அமோக வரவேற்பு கிடைத்ததால், மற்ற பெண்களும் ரொட்டி தொழிலை துவங்கினர். ரொட்டிகளை தயாரித்து, சுற்றுப்புற ஊர்களுக்கும், நகரங்களுக்கு கொண்டு சென்று விற்கின்றனர்.
ரொட்டி தொழில் முதலில், கோகேரி கிராமத்தில் துவங்கப்பட்டது.
அங்குள்ள பெண்கள் சோள ரொட்டிகளை தயாரித்து விற்றனர். இவர்களுடன் நுாற்றுக்கணக்கான பெண்கள் கை கோர்த்தனர்.
கதக் மற்றும் அருகில் உள்ள ஹோட்டல், தாபா என, பல இடங்களில் இருந்தும், ரொட்டி ஆர்டர்கள் குவிய துவங்கின. இதையறிந்து மற்ற கிராமத்தினரும் இந்த தொழிலை துவங்கினர்.
தற்போது பல பெண்கள் ரொட்டி தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளனர். ராகி ரொட்டி, சோளம், கம்பு ரொட்டி, சிறுதானிய ரொட்டி தயாரித்து விற்கின்றனர்.
கொரோனா பெண்களின் கைகளை கட்டிப்போட்ட பெண்களுக்கு இந்த தொழில் கை கொடுத்து உதவியது. கஜேந்திர கடா உட்பட, அருகில் உள்ள நகரங்களின் ஹோட்டல்கள், தாபா, கடைகளுக்கு பெண்கள் ரொட்டி தயாரித்து சப்ளை செய்கின்றனர்.
பெண்கள் பலர், இயந்திரங்களை பயன்படுத்தாமல் கைகளால் ரொட்டி தயாரிக்கின்றனர். அமோகமாக விற்பனை ஆகிறது. இவர்களின் பொருளாதாரமும் உயர்ந்துள்ளது.
கஜேந்திரகடா தாலுகா செயல் நிர்வாக அதிகாரி மோகன் கூறியதாவது:
கிராமப்பகுதிகளில் பல பெண்களின் பொருளாதாரம் உயர, சஞ்சீவினி திட்டம் உதவியாக உள்ளது. கோகேரி கிராமத்தின் ஜெய் சிவாஜி சஞ்சீவினி மகளிர் குழுவினர், மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. இவர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக திகழ்கின்றனர்.
கொரோனா நேரத்தில், தின கூலி வேலை தேடிய பெண்கள், இன்று பலருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு முன்னேறி உள்ளனர். இதற்கு முன் பெண்கள் மாதம் 9,000 ரூபாய் வரை சம்பாதித்தனர். ஆனால் இன்று தினமும் 6,000 ரூபாய் முதல் 8,000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.