சவாலில் தோற்ற காங்., - எம்.எல்.ஏ., தொகுதியில் தலை காட்டாமல் தவிப்பு
சவாலில் தோற்ற காங்., - எம்.எல்.ஏ., தொகுதியில் தலை காட்டாமல் தவிப்பு
சவாலில் தோற்ற காங்., - எம்.எல்.ஏ., தொகுதியில் தலை காட்டாமல் தவிப்பு
ADDED : ஜூன் 13, 2024 04:52 PM

சிக்கபல்லாபூர்:சவாலில் தோற்று விட்டதால், லோக்சபா தேர்தல் முடிவு வெளியாகி, 10 நாட்களாகியும் சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், தொகுதியில் தலை காண்பிக்கவில்லை.
கடந்த 2023, சட்டசபை தேர்தலில் சிக்கபல்லாபூர் தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக சுதாகர், காங்கிரஸ் வேட்பாளராக பிரதீப் ஈஸ்வர் போட்டியிட்டனர். பிரதீப் ஈஸ்வர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பின், சுதாகரை கிண்டலாக விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
லோக்சபா தேர்தலில், சுதாகருக்கு பா.ஜ., சீட் அறிவித்த பின், பிரதீப் ஈஸ்வர், 'சட்டசபை தேர்தலில் வெற்றி முடியாதவருக்கு, பா.ஜ., சீட் கொடுத்துள்ளது. எங்கள் கட்சி வேட்பாளரை விட, சுதாகர் ஒரே ஒரு ஓட்டு கூடுதலாக பெற்றாலும், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வேன். இவரை பார்லிமென்ட் படியை மிதிக்க விடமாட்டேன்' என சவால் விடுத்தார்.
ஆளுங்கட்சியாக இருப்பதாலும், வாக்குறுதி திட்டங்களாலும், காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என, பிரதீப் ஈஸ்வர் எதிர்பார்த்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்பு பொய்த்தது. சுதாகர் 1.50 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் பிரதீப் ஈஸ்வர் தர்ம சங்கடத்துக்கு ஆளானார்.
'இவர் எப்போது ராஜினாமா செய்வார்' என, பா.ஜ.,வினர் கிண்டலாக கேள்வி எழுப்பினர். இவரது ராஜினாமா கடிதமும், சமூக வலைதளத்தில் பரவியது. சவால் விடுத்து தோற்று போன, பிரதீப் ஈஸ்வர் தொகுதியில் தென்படவில்லை. லோக்சபா தேர்தல் முடிவு வெளியாகி, 10 நாட்களாகியும் அவர் தொகுதியில் தலை காண்பிக்கவில்லை,
முடிவு வெளியான பின், மாவட்ட பொறுப்பு அமைச்சர் சுதாகர், காங்., வேட்பாளர் ரக்ஷா ராமையா, எம்.எல்.சி., சீதாராம் உட்பட பல தலைவர்கள் ஊடகத்தினர் சந்திப்பு நடத்தி, புதிய எம்.பி., சுதாகருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் சிக்கபல்லாபூர் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் வரவில்லை.
இதற்கிடையில், காங்., வேட்பாளர் ரக்ஷா ராமையாவின் தோல்விக்கு, பிரதீப் ஈஸ்வரின் பேச்சும் காரணம் என, தொண்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
'சிக்கபல்லாபூர் மாவட்டத்தில், பெரிய தலைவராக வளர பிரதீப் ஈஸ்வருக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த வாய்ப்புகளை அவரே கை நழுவ விடுகிறார்' என, கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.