ஒரே கல்லில் 2 மாங்காய்க்கு காங்., குறி;
ஒரே கல்லில் 2 மாங்காய்க்கு காங்., குறி;
ஒரே கல்லில் 2 மாங்காய்க்கு காங்., குறி;
UPDATED : பிப் 10, 2024 08:50 AM
ADDED : பிப் 10, 2024 06:32 AM

மகனுக்கு லோக்சபா 'சீட்' கொடுத்து, தந்தையை தக்க வைத்து ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க, காங்கிரஸ் குறி வைத்து உள்ளது.
பா.ஜ.,விலிருந்து விலகி காங்கிரசில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவதி மூலம், லோக்சபா தேர்தலில், கர்நாடகாவின் வட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று, காங்கிரஸ் நினைத்திருந்தது.
ஆனால் காங்கிரஸ் தலைவர்களுக்கு 'விபூதி' அடித்துவிட்டு, ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பா.ஜ.,வுக்கே சென்று விட்டார்.
பா.ஜ., தீவிரம்
இதை தொடர்ந்து லட்சுமண் சவதியை இழுக்கும் முயற்சியை, பா.ஜ., மேற்கொண்டுள்ளது. பா.ஜ.,வுக்கு வந்தால் லோக்சபா தேர்தலில், சிக்கோடி தொகுதி பா.ஜ., 'சீட்' தருகிறோம்;
உங்கள் மகனுக்கு சட்டசபை தேர்தல் 'சீட்' தருகிறோம் என்று, லட்சுமண் சவதிக்கு, அவரது நெருங்கிய நண்பர்கள் மூலம், ஆசை காண்பித்து வருகிறது. ஆனால் எக்காரணம் கொண்டும், பா.ஜ.,வுக்கு செல்ல மாட்டேன் என்று, அவர் கூறி வருகிறார்.
இந்நிலையில் லட்சுமண் சவதியை கட்சியில் தக்க வைக்கவும், சிக்கோடி தொகுதியில் வெற்றி பெறவும், காங்கிரஸ் 'பிளான்' போட்டு உள்ளது.
அதாவது சிக்கோடி லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக லட்சுமண் சவதியின் மகன் சிதானந்த் சவதியை நிறுத்த, காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர்.
சிக்கோடி லோக்சபா தொகுதிக்கு உட்பட்டு நிப்பானி, சிக்கோடி - சடலகா, அதானி, காக்வாட், குடச்சி, ராய்பாக், ஹுக்கேரி, யமகனமரடி ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
சவதியின் நண்பர்கள்
இதில், ஐந்து தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்; மற்ற மூன்று தொகுதியில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
இதில் இரண்டு தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமண் சவதியின் நெருங்கிய நண்பர்கள்.
இதனால் சிதானந்த் சவதியை வேட்பாளராக களமிறக்கினால் வெற்றி உறுதி என்று, காங்கிரஸ் கணக்கு போட்டு உள்ளது.
மகனுக்கு 'சீட்' வழங்கினால், லட்சுமண் சவதி பா.ஜ., பக்கம் செல்ல மாட்டார். சிக்கோடி தொகுதியில் வெற்றி பெறுவதுடன் பெலகாவி உட்பட சில தொகுதிகளிலும், எளிதில் வென்று விடலாம் என்பது காங்கிரசின் கணக்காக உள்ளது.
ஆனால் அதே தொகுதியில் சிக்கோடி - சடலகா காங்கிரஸ் எம்.எல்.ஏ., கணேஷ் ஹுக்கேரியின் பெயரும் அடிபடுகிறது. இவரது தந்தை பிரகாஷ் ஹுக்கேரி ஒரு முறை எம்.பி.,யாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
.- நமது நிருபர் -