தேர்தல் தோல்வியால் ஆட்டம் காணும் அஜித் பவார் கட்சி
தேர்தல் தோல்வியால் ஆட்டம் காணும் அஜித் பவார் கட்சி
தேர்தல் தோல்வியால் ஆட்டம் காணும் அஜித் பவார் கட்சி
ADDED : ஜூன் 06, 2024 01:40 PM

மும்பை: லோக்சபா தேர்தல் தோல்வியால், மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்., கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 15 பேர் சரத்பவாருடன் தொடர்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்த அஜித்பவார் சில எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ., அணியில் இணைந்தார். அதில், அஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிராவில் தே.ஜ., கூட்டணி தோல்வி அடைந்தது. 4 தொகுதிகளில் போட்டியிட்ட அஜித்பவார் தரப்பு ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. சரத்பவார் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து களமிறங்கிய அஜித் பவாரின் மனைவி படுதோல்வியை சந்தித்தார். சரத்பவார் தரப்பில் 8 எம்.பி.,க்கள் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் தோல்வி காரணமாக அஜித்பவார் தலைமையிலான கட்சியில் குழப்பம் ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 எம்.எல்.ஏ.,க்கள் சரத்பவாருடன் தொடர்பில் உள்ளதாகவும், அவரது அணிக்கு செல்ல விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அவர்களை ஏற்றுக் கொள்வது குறித்து சரத்பவார் தான் முடிவு செய்ய வேண்டும் என சரத்பவாரின் ஆதரவாளரான ஜெயந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
குழப்பம் எழுந்துள்ள நிலையில், அஜித்பவார், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.