பட்ஜெட் பற்றி சாமானிய மக்களின் நம்பிக்கை!
பட்ஜெட் பற்றி சாமானிய மக்களின் நம்பிக்கை!
பட்ஜெட் பற்றி சாமானிய மக்களின் நம்பிக்கை!
UPDATED : ஜூலை 23, 2024 11:51 PM
ADDED : ஜூலை 23, 2024 11:46 PM

புதுடில்லி : மோடி தலைமையிலான மூன்றாவது தே.ஜ., கூட்டணி ஆட்சியின் முதலாவது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏழாவது முறையாக நிர்மலா சீதாராமன் வாசித்தளித்த இந்த பட்ஜெட் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
பொதுவாக ஒரு பட்ஜெட்டில் சராசரி மக்கள் எதிர்பார்க்கக்கூடிய ஜனரஞ்சகமான அம்சங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை. அடுத்த ஐந்தாண்டு காலத்தில் நாடு செலுத்தப்படும் பாதையை கோடிட்டுக் காட்டும் திருப்புமுனை திட்டங்கள் இதில் அறிவிக்கப்படவில்லை.
குறிப்பாக, பத்தாண்டு ஆட்சிக்குப் பின் முதல்முறையாக வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவை இழந்த பா.ஜ., அதை மீட்டெடுக்க என்ன செய்யப்போகிறது என்பதை உணர்த்தக்கூடிய அடையாளங்கள் எதையும் இந்த பட்ஜெட்டில் காண இயலவில்லை.
ஆச்சரியம்
பட்ஜெட் குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரிக்க முக்கிய காரணம், தேர்தலால் மாறிய அரசியல் சூழ்நிலை. அதன் பிரதிபலிப்பை பட்ஜெட்டில் பார்க்க முடியாமல் போனது பல தரப்பிலும் ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கிறது.
நடுத்தர வர்க்கம் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பெரிதாக எதிர்பார்ப்பது வருமான வரி குறைப்பும் சலுகைகளுமே. விற்பனை வரிக்கு மாற்றாக அமலான ஜி.எஸ்.டி.,யின் தாக்கம் குறைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பும் பெரிதாக இருந்தது.
அவர்களுக்கு உற்சாகம் தரக்கூடிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. வருமான வரி விகிதங்களில் சிறு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஆண்டுக்கு 17,500 ரூபாய் வரை ஒவ்வொருவரும் சேமிக்க முடியும் என்பது நிதியமைச்சரின் கணக்கு.
கடந்த ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை எட்டு கோடிக்கு மேல். அவர்களில் எத்தனை பேரால் இந்தளவு சேமிக்க முடியும் என்பது விடை தெரியாத கணக்கு.
தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை, சென்னையில் நேற்று சவரனுக்கு 2,200 ரூபாய் குறைந்துள்ளது.
எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதால், மொபைல் போன் விலைகள் குறையும் என சிலர் கணிக்கின்றனர். அந்த துறையின் நிபுணர்கள் அதற்கான வாய்ப்பு குறைவு என்கின்றனர்.
எதிர்பார்த்த எதுவும் இல்லை என்றாலும், மக்கள் மனம் தளரவில்லை என்று சந்தை நிலவரம் காட்டுகிறது. போனது போகட்டும், அடுத்த பட்ஜெட்டில் நமக்கு நல்லது நடக்காமலா போகும் என்று இந்திய மண்ணுக்கே உரிய நிரந்தரமான நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
யாருக்காக இந்த பட்ஜெட் என்று கண்டு பிடிக்க முடியாமல் பொருளாதாரப் புலிகள் ஒருபக்கம் தலையை சொறிந்து கொண்டிருக்க, இதை எந்த பிரிவுக்கும் எதிரான பட்ஜெட் என்று முத்திரை குத்த இயலாமல், இன்னொரு பக்கம் பிரதான எதிர்க்கட்சியே திணறுகிறது.
குழப்பம்
படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை என்பதை முக்கிய பிரச்னையாக சித்தரித்து தேர்தலில் ஆதரவு திரட்டிய அக்கட்சி, 'வேலை வாய்ப்புக்கான ஊக்கத்தொகை திட்டத்தை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருந்து நிதியமைச்சர் சுட்டிருக்கிறார்' என சொல்கிறது. இது கண்டனமா பாராட்டா என்பதில் குழப்பம் நிலவுகிறது.
முதல் முறையாக வேலைக்கு சேர்ந்து, பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கு, அவர்களுடைய கணக்கில் மூன்று தவணைகளாக 15,000 ரூபாய் செலுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
இதன் வாயிலாக, 2.1 கோடி இளைஞர்கள் பயன்பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது. கல்வி, தொழில், பயிற்சி துறைகளுக்கு நிதி ஒதுக்கி முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. விவசாய ஆராய்ச்சி பணிகளுக்கு ஊக்கம் தரும் அறிவிப்புகளும் உள்ளன.
ஆனால், இதெல்லாம் தும்பை விட்டு வாலை பிடிப்பது போன்ற முயற்சிகள் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
உதாரணமாக, எந்த ஒரு நிறுவனமும் தனது தேவைக்காக ஆட்களை வேலைக்கு எடுக்குமே அல்லாமல், அரசு மானியம் தருகிறது என்பதால் எடுக்கப்போவது இல்லை; அவர்களுக்கு பயிற்சி அளிக்க நிறுவன சமூகப் பொறுப்பு நிதியை பயன்படுத்தவும் முன்வராது என்கின்றனர்.
விவசாயம் சார்ந்த திட்டங்களுக்கு கோடிகளில் ஒதுக்குவதைக் காட்டிலும், வேளாண் பொருட்களுக்கு நியாயமான ஆதரவு விலை கொடுத்தாலே போதும் என்பது அவர்களின் வாதம்.
முந்தைய ஆண்டுகளைப் போல பட்ஜெட் உரையில் திருக்குறளோ கவிதை வரிகளோ இடம்பெறவில்லை. இதுவரை இல்லாத குறைவாக, 85 நிமிடங்களில் நிர்மலா சீதாராமன் உரையை முடித்து விட்டார்.
வளர்ச்சி என்ற வார்த்தையை அவர் 22 முறை உச்சரித்தார். எனினும், நாட்டின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உறுதுணையாக இருந்துவரும் ரயில்வே குறித்த திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை.
பெரும்பான்மை கிடைக்க கைகொடுக்கும் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சிகள் ஆட்சி செய்யும் பீஹாருக்கும் ஆந்திராவுக்கும் 41,000 கோடி ரூபாய் வழங்க மோடி அரசு முன்வந்திருப்பதை நிதியமைச்சர் அறிவித்துஉள்ளார்.
ஆறுதல் பரிசு
தனியாக தெரியுமே என்பதால், கிழக்கு மாநிலங்கள் என்ற தலைப்பில் வேறு சில மாநிலங்களுக்கும் ஆறுதல் பரிசு தரப்பட்டுள்ளது.
விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்கும் மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா மாநிலங்களுக்கு விசேஷ கவனிப்பு இல்லை என்பது வியப்பான விஷயம்.
தங்களுடைய மாநிலத்தின் பெயர்கூட பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. முதல்வர் ஸ்டாலின் டில்லி பயணத்தையே ரத்து செய்துள்ளார்.
எல்லாரையும் திருப்திப்படுத்த யாராலும் முடியாது. என்றாலும், எவரையுமே திருப்திப்படுத்தாத ஒரு பட்ஜெட்டை உருவாக்கியதன் பின்னணி என்ன என்பதே அரசியல் வட்டாரங்களில் சூடாக விவாதிக்கப்படும் கேள்வி.